Auto Sales 2024: வாகனங்களை வாங்கி குவித்த இந்தியர்கள் - கார்கள் & பைக்கிற்கு இவ்வளவு டிமாண்டா? 2024ன் விற்பனை விவரம்
Auto Sales 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2024ம் ஆண்டில் விற்பனை எப்படி இருந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Auto Sales 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2024ம் ஆண்டில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் தேவை அதிகரித்து காணப்பட்டது.
2024ல் ஆட்டோமொபைல் சந்தை
தொழில்துறையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான தேவை வலுவாக இருந்ததால், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சில்லறை விற்பனை முந்தைய ஆண்டை விட 2024இல் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2023 காலண்டர் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2,39,28,293 யூனிட்களிலிருந்து, 2024 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வாகனப் பதிவுகளில் 9 சதவிகிதம் உயர்ந்து 2,61,07,679 யூனிட்டுகளாகத் தொழில்துறை வளர்ச்சி கண்டுள்ளது. இந்த தகவலை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (FADA) தெரிவித்துள்ளது.
வாகன விற்பனை விவரம்:
2024 ஆம் ஆண்டில், பயணிகள் வாகன விற்பனை 40,73,843 யூனிட்களைத் தொட்டது. இது 2023 இல் விற்கப்பட்ட 38,73,381 யூனிட்களில் இருந்து 5 சதவிகிதம் அதிகமாகும். இரு சக்கர வாகனங்கள் விற்பனை 2024 இல் 11 சதவிகிதம் உயர்ந்து 1,89,12,959 யூனிட்களாக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 1,70,22,200 ஆக இருந்தது. இதற்கிடையில், வணிக வாகன விற்பனை 2024 இல் 10,04,856 அலகுகளாக இருந்தது. 2023ல் 11,05,942 ஆக இருந்த முச்சக்கர வண்டிகள் பதிவு 2024ல் 11 சதவிகிதம் அதிகரித்து 12,21,909 யூனிட்களாக உள்ளது. டிராக்டர் விற்பனை 3 சதவிகிதம் வளர்ச்சி கண்டு 8,94,112 யூனிட்களாக இருந்தது.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு
FADA இன் தலைவர் CS விக்னேஷ்வர் பேசுகையில், " கடந்த ஆண்டில் வெப்ப அலைகள், மத்திய மற்றும் மாநில அளவிலான தேர்தல்கள் மற்றும் சீரற்ற பருவமழை உள்ளிட்ட பல இடையூறுகள் இருந்தபோதிலும், வாகன சில்லறை வர்த்தகம் நெகிழ்ச்சியுடன் இருந்தது. சிறந்த வழங்கல், புதிய மாடல்கள் மற்றும் கிராமப்புற அளவில் வலுவான தேவை ஆகியவை இரு சக்கர வாகனப் பிரிவில் வளர்ச்சியைத் தூண்டியது. அதேரம், நிதித் தடைகள் மற்றும் EV களில் இருந்து அதிகரித்து வரும் போட்டி ஆகியவை ஆட்டோமொபைல் துறைக்கு தொடர்ந்து முக்கிய சவால்களாக இருந்தன. பயணிகள் வாகனம் (PV) பிரிவு வலுவான நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் தயாரிப்பு வெளியீடுகளால் பயனடைந்தது. இருப்பினும் அதிக சரக்கு காரணமாக ஆண்டின் இரண்டாம் பாதியில் தள்ளுபடிகள் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று குறிப்பிட்டார்.
ஆட்டோமொபைல் சந்தையின் எதிர்காலம்:
ஆட்டோமொபைல் சந்தையின் வணிகக் கண்ணோட்டம் குறித்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “இருசக்கர வாகனப் பிரிவில், கிராமப்புற வருமானம், புதிய மாடல் அறிமுகங்கள் மற்றும் EV சீர்குலைவுளால் மந்தமான தேவைக்குப் பிறகு வளர்ச்சியை மீட்டெடுக்கலாம். வணிக வாகன துறையானது உள்கட்டமைப்பு முதலீடுகள், நிலையான கடன் கிடைக்கும் தன்மை மற்றும் அரசாங்க ஊக்கத்தொகை ஆகியவற்றிலிருந்து வேகத்தை எதிர்பார்க்கிறது.
அதே நேரத்தில், புதிய SUV அறிமுகங்கள் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு வரும் என்று பயணிகள் வாகன விநியோகஸ்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் அம்சம் நிறைந்த EVகள் வாங்குபவர்களைக் கவர்ந்திழுக்கும். இருப்பினும், விலை உணர்திறன் கொண்ட வாங்குபவர்கள் மற்றும் வட்டி விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்” என்று ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.