Tata Scarlet: 2 In 1 - சியாராவே வரல, அதுக்குள்ள குட்டி சியாராவை ரெடியாக்கும் டாடா - தார் காருக்கே சவாலா?
Tata Scarlet Compact SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்காக டாடா நிறுவனம் முற்றிலும் புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆன ஸ்கார்லெட் கார் மாடலை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.

Tata Scarlet Compact SUV: டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆன ஸ்கார்லெட் கார் மாடல் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
டாடா ஸ்கார்லெட் காம்பேக்ட் எஸ்யுவி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2030ம் ஆண்டிற்குள், 7 முற்றிலும் புதிய எஸ்யுவி கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக டாடா நிறுவனம் நடப்பாண்டு தொடக்கத்தில் அறிவித்தது. இந்நிலையில் அந்த 7 புதிய கார் மாடல்களில் ஒரு காம்பேக்ட் எஸ்யுவி இருப்பதும், நிறுவனம் சார்பில் அதற்கு ஸ்கார்லெட் எனும் கோட்நேமை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சப் - 4 மீட்டர் எஸ்யுவி காரானது விரைவில் அறிமுகமாக உள்ள சியாராவில் உள்ளதை போன்ற பாக்ஸி தோற்றத்தையே பெற உள்ளது. டாடா நிறுவனம் ஏற்கனவே 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார் பிரிவில் நெக்ஸானை கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய காரின் மூலம் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் இரண்டாவது காராக, ஸ்கார்லெட்டை சந்தைப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது.
டாடா ஸ்கார்லெட் - இன்ஜின் விவரங்கள்
டாடாவின் ஸ்கார்லெட் மாடலானது உற்பத்திக்கான மிகவும் ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளது. அதன் காரணமாக இந்த எஸ்யுவி தொடர்பான கூடுதல் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதேநேரம், இந்த காரானது ஒரேநேரத்தில் இன்ஜின் மற்றும் மின்சார எடிஷன்களை உருவாக்க உதவும், மோனோகோக் சேஸிஸை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், இன்ஜின் அடிப்படையிலான எடிஷன் ஆனது நெக்ஸானில் இருக்கும், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினை கடன் வாங்க அதிக வாய்ப்புள்ளது. இது 118bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய திறனை கொண்டுள்ளது. அதேநேரம், கர்வ்வில் உள்ள 123bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினையும் புதிய காரில் டாடா பயன்படுத்தலாம்.
இதுபோக, கடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழித்தோன்றலான, முற்றிலும் புதிய நேட்சுரல்-ஆஸ்பிரேட்டட் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும் டாடா ஸ்கார்லெட்டில், பொருத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது. டாடா நெக்ஸானில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் சூழலில், ஸ்கார்லெட் எஸ்யுவி டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
டாடா ஸ்கார்லெட் - மின்சார எடிஷன் விவரங்கள்
ஹாரியரில் இருக்கும் டூயல் மோட்டர் செட்டப் டாடாவின் புதிய ஸ்கார்லெட்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆக்சிலிலும் ஒரு மோட்டர் இடம்பெறும். இதேபோன்று, ஹாரியர் மின்சார எடிஷனில் காணப்படும் ஆல் வீல் ட்ரைவ் அம்சமும் புதிய வாகனத்தில் வழங்கப்படலாம். அதேநேரம், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் பேக்கேஜிங் கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்கார்லெட்டின் இன்ஜின் எடிஷனில் ஆல் வீல் ட்ரைவ் அம்சத்தை டாடா வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
டாடா ஸ்கார்லெட் - விலை விவரங்கள்
புதிய ஸ்கார்லெட் கார் மாடலின் விலை நெக்ஸானை போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மினி சியாரா என குறிப்பிடப்படும் இந்த காரின் விலையானது இந்திய சந்தையில் 8 லட்ச ரூபாயில் தொடங்கி, டாப் எண்ட் வேரியண்டின் விலை ரூ.15 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம். அதேநேரம், மின்சார எடிஷனின் தொடக்க விலை ரூ.13 லட்சத்தில் தொடங்கி டாப் என் வேடியண்டின் விலை ரூ.17 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், கார் எப்போது சந்தைப்படுத்தப்படும் என்ற தகவலும் தற்போது வரை இல்லை..
டாடா ஸ்கார்லெட் - போட்டியாளர்கள் யார்?
வெளியாகியுள்ள தகவல்களின்படி, டாடா ஸ்கார்லெட்டின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆனது , மோனோகோக் சேஸில் உருவான மாருதி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் கார் மாடல்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், லைஃப்ஸ்டைல் எஸ்யுவி ஆக அறிமிகப்படுத்தப்படும் ஸ்கார்லெட்டானது, தார் மற்றும் ஜிம்னியின் ஆஃப் ரோட் திறமைகளுக்கு சவால் விடுவது என்பது மிகவும் கடினமானது ஆகும். அண்மையில் தான், கியா நிறுவனம் தனது புதிய சப் 4 மீட்டர் எஸ்யுவி ஆன சைரோஸை பாக்ஸி தோற்றத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதே செக்மெண்டில் கியா ஏற்கனவே சோனெட் கார் மாடலை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.





















