MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
MG Hector Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, எம்ஜி ஹெக்டர் காரில் உள்ள அம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

MG Hector Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அப்க்ரேட் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர் காரின் தொடக்க விலை ரூ.11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் அறிமுகம்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது மேம்படுத்தப்பட்ட ஹெக்டர் 2026 எடிஷன் கார் மாடலை, எம்ஜி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது விற்பனையில் உள்ள எடிஷனுக்கான விலையை காட்டிலும், சுமார் ரூ.2 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். 6 மற்றும் 7 சீட்டர் அமைப்புகளில் கிடைக்கக் கூடிய மேம்படுத்தப்பட்ட ஹெக்டர் ப்ளஸ் கார் மாடலுக்கான தொடக்க விலை ரூ.17.29 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் பெட்ரோல் வேரியண்ட்களுக்கான விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டீசல் வேரியண்ட்களுக்கான விலை அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் ஆப்ஷன்கள்
மெக்கானிக்கல் அடிப்படையில் ஹெக்டரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் 143Hp மற்றும் 250Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் CVT ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. அதோடு 170Hp மற்றும் 350Nm ஆற்றலி உற்பத்தி செய்யக்கூடிய டீசல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
விலை பட்டியல்:
- ஹெக்டர் செலக்ட் MT - ரூ. 11.99 லட்சம்
- ஹெக்டர் ஸ்மார்ட் MT - ரூ.13.99 லட்சம்
- ஹெக்டர் ஷார்ப் MT - ரூ.14.99 லட்சம்
- ஹெக்டர் ஷாவி MT - ரூ.16.79 லட்சம்
- ஹெக்டர் ஸ்மார்ட் CVT - ரூ.16.29 லட்சம்
- ஹெக்டர் ஷார்ப் CVT - ரூ.18.09 லட்சம்
- ஹெக்டர் ஷாவி CVT - ரூ.18.99 லட்சம்
- ஹெக்டர் ஷார்ப் 7 சீட்டர் - ரூ.17.29 லட்சம்
- ஹெக்டர் ஷாவி 7 சீட்டர் - ரூ.19.49 லட்சம்
முன்பதிவு தொடங்கியது..
விருப்பமுள்ள நபர்கள் எம்ஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை அணுகியோ அல்லது நிறுவனத்தின் டீலர்ஷிப் அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ முன்பதிவு செய்துகொள்ளலாம். நகரம் மற்றும் டீலர்ஷிப் அடிப்படையில் முன்பதிவுக்கான டோக்கன் கட்டணம் மாறுபடலாம். தொடர்ந்து வெகு விரைவிலேயே கார்களின் விநியோகமும் தொடங்கப்பட உள்ளது. உள்நாட்டு சந்தையில் ஹெக்டர் காரானது, டாடா ஹாரியர், சஃபாரி, ஜீப் காம்பஸ், மஹிந்த்ரா XUV700 மற்றும் ஹுண்டாய் அல்கசார் உள்ளிட்ட கார் மாடல்களுடன் ஹெக்டர் போட்டியிடுகிறது.
ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் - வெளிப்புற அப்டேட்கள்
கடந்த 2029ம் ஆண்டு உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஹெக்டர் மாடல் பெறும் இரண்டாவது முக்கிய அப்டேட்டாக பார்க்கப்படுகிறது. இதில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் காஸ்மெடிக் அப்டேட்கள், கூடுதல் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் பல மேம்பாடுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வெளிப்புறத்தில் லேசான ஆனாலும் கவனிக்கத்தக்க மாற்றங்களை பெற்றுள்ளது. பெரிய க்ரில் ஆனது அதன் வழக்கமான அளவை தக்கவைத்துக் கொண்டாலும், முன்பிருந்த டைமண்ட் வடிவிலான டிசைனிலிருந்து மாறுபட்டு புதிய ஹனிகாம்ப் ஸ்டைல் பேட்டர்னை கொண்டுள்ளது. கீழ் பகுதியில் இருந்த ஏர் இண்டேக் பகுதியானது லேசாக திருத்தப்பட்டுள்ளது.
அலாய் வீல்கள் அளவில் மாறாவிட்டாலும், தோற்றத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. லைட்டிங் செட்-அப்பில் ஒட்டுமொத்தமாக எந்த மாற்றமும் செய்யாமல் பழைய எடிஷனில் இருந்து அப்படியே தொடர்கிறது. அதேநேரம் வெளிப்புற வண்ணப்பூச்சில் புதியதாக செலடான் ப்ளூ ம்ற்றும் பேர்ல் வைட் ஆகிய ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் - உட்புற அப்டேட்கள்
உட்புறத்தை நோக்கி நகர்ந்தால், புதிய மேம்படுத்தப்பட்ட ஹெக்டரானது டூயல் டோன் அர்பன் டேன் கேபின் தீமை கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட 14 இன்ச் போர்ட்ரெய்ட் ஸ்டைல் டச்ஸ்க்ரீன் ஆனது, தற்போது MG-யின் i-Swipe கெஸ்டர் கண்ட்ரோல் வசதியை அணுக உதவுகிறது. இதன் மூலம் இரண்டு விரல்களைகொண்டு ஸ்வைப் செய்தாலே க்ளைமேட் கண்ட்ரோலை கையாள முடியும். அதேநேரம், மூன்று விரல்களை கொண்டு ஸ்வைப் செய்தால், ஆடியோ செயல்பாடுகளைகையாள முடியும். இதுபோக பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், கனெக்டட் கார் டெக்ட், 360 டிகிரி கேமரா, ஹாரிசாண்டல் ஏசி வென்ட்கள், ப்ராக்ஸிமிட்டி லாக் மற்றும் அன்லாக்குடன் கூடிய டிஜிட்டல் கீ என ஏராளமான அம்சங்களும் ஹெக்டரில் இடம்பெற்றுள்ளன.





















