Sabarimala Updates: சிறப்பு பேருந்து... கூகுள் பே காணிக்கை... தங்கும் வசதி... - சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்!
சபரிமலைக்கு இன்று முதல் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் ஐயப்ப பக்தர்களுக்கான தங்கும் வசதிக்காகவும் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு இன்று முதல் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் ஐயப்ப பக்தர்களுக்கான தங்கும் வசதிக்காகவும் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜை நடைபெற்று வருகிறது. தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்காக உடனடி முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு வரை ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்காக அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் 500க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் தங்கும் வசதிக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆன்லைனில் பதிவு செய்து வரும் பக்தர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பி சென்று விட வேண்டும். இதனால் வெகுவாக ஐயப்ப பக்தர்களின் வருகையும் குறைந்தது. கொரோனா பரவல் காரணமாக நெய்யபிஷேகம், பம்பா ஸ்நானம் பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான் ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கான அனுமதியை தர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஆனந்த கோபன் “சபரி மலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நெய்யபிஷேகத்தை பக்தர்கள் நேரடியாக நடத்துவது, சன்னிதானத்தில் பக்தர்கள் 12 மணி நேரம் தங்குவது உள்ளிட்ட வசதிகள் மீண்டும் தொடங்கப்படும். இதற்கான அனுமதியை அரசு விரைவில் வழங்கும் என நம்புகிறேன். ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்யும் படியும் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலைக்கு ஆண்டு தோறும் பக்தர்கள் சென்று வர ஏதுவாக போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த முறை 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு இனி முதல் இ-சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இந்த சேவை தேவசம் போர்டு தனலக்ஷ்மி வங்கியுடன் இணைந்து சபரிமலையில் வரும் பக்தர்கள் இனி மேல் இ-சேவை மூலமாக காணிக்கை செலுத்த வசதி செய்துள்ளன. இதன் படி கூகுள் பே வழியாக இனி பக்தர்கள் காணிக்கை செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.