விழா கோலத்தில் காஞ்சிபுரம்..! ஏகாம்பரநாதர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர விழா
பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றான பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ திருகல்யாண திருவிழா நடப்பது வழக்கம். இதையொட்டி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள ராஜகோபுர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நேற்று நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் கலச அபிஷேகம் தீபாராதனைகள் நடக்கும் பந்தக்கால் ஆலயத்தின் முன்பாக நடப்பட்டது.
பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்மன் பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அதில் வரும் 11 தேதி வெள்ளி ரிஷபம் வாகனம் 12 ஆம் தேதி அதிகார நந்தி வாகனம் 13 ஆம் தேதி காலையில் 63 நாயன்மார்கள் புறப்பாடு உற்சவமும் இரவு வெள்ளித் தேர் உற்சவம் நடைபெறும். வரும் 16 ஆம் தேதி கோவிலின் வரலாற்றை விளக்கும் மாவடி சேவை உற்சவம், நடைபெற்று 17 ஆம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை வரை பங்குனி மாத திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி மாதம் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது pic.twitter.com/qWeriur4xT
— Kishore Ravi (@Kishoreamutha) March 8, 2022">
ஏகாம்பரநாதர் கோயில் தல வரலாறு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகாம்பர நாதர் கோயில், பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன்பெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் தலவிருட்சம் என போற்றப்படும் மாமரத்தின் வயது 5000 ஆண்டுகள். இந்த மாமரத்தின் கீழ் உமையாள் தவம் செய்ததாகவும், இம்மரத்தில் கனியும் மாங்கனிகள் நான்கு வித சுவையுடையவை என்றும் கூறப்படுகிறது.
விழாக்கள்
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன