மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் யூரியா இல்லாததால் விவசாயிகள் கடும் அவதி
மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் யூரியா தட்டுப்பாடு காரணமாக மன்னார்குடிக்கு சென்று தனியார் கடையில் யூரியா வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கனமழையின் காரணமாக நெல் பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் மழை இல்லாத காரணத்தினால் விவசாய நிலத்தில் தேங்கி இருந்த மழை நீரை வடிய வைத்து தற்பொழுது உரம் அடிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட கமலாபுரம் புனவாசல் எருக்காட்டூர் கருப்பூர் மூலங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது 65 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு யூரியா இட வேண்டிய நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் யூரியா தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். யூரியா தட்டுப்பாடு காரணமாக மன்னார்குடிக்கு சென்று தனியார் கடையில் யூரியா வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தனியார் கடையில் யூரியா வாங்க வேண்டுமென்றால் 850 ரூபாய் மதிப்புள்ள இடுபொருள் வாங்கினால் மட்டுமே யூரியா கொடுப்பதாகவும் மேலும் கமலாபுரத்திலிருந்து மன்னார்குடிக்கு வாகனத்திற்கு ஆயிரம் ரூபாய் வாடகை கொடுப்பதால் பல மடங்கு செலவு செய்து யூரியா வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் தடையின்றி யூரியா கிடைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வைத்துள்ளனர். இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு நாளை மூலங்குடி மற்றும் கொட்டாரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு 200 மெட்ரிக் டன் யூரியா அனுப்பப்பட இருப்பதாகவும் மாவட்டம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் யூரியா தேவைப்படுகிறதோ அந்த பகுதிகளுக்கு உடனடியாக யூரியா தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை இந்த ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலையத்தில் மட்டுமல்ல திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலையங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக யூரியா தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர் இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர் ஒவ்வொரு முறையும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்று அங்கு கேட்டால் யூரியா வரவில்லை என்று திருப்பி அனுப்புகின்றனர் இதனால் தனியார் கடைகளில் அதிக விலைக்கு யூரியா விற்பனை செய்கிறார்கள் ஆகையால் தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு யூரியா தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆசீர் கனகராஜன் உடனடியாக மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அங்கே யூரியா தட்டுப்பாடு இருப்பதை கண்டறிந்த அவர் உடனடியாக 10 டன் யூரியா மற்றும் ஐந்து,டன் காம்ப்ளஸ் உரங்களை அங்கு இறக்குவதற்கு ஏற்பாடு செய்தார்.மேலும் விவசாயிகளுக்கு யூரியா காம்ப்ளக்ஸ் போன்ற உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வங்கி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.