நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 21% அனுமதியுங்கள் - விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர்
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 21 சதவீதம் அனுமதிக்க விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.
தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 21 சதவீதம் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வலியுறுத்தினார்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கமாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், பொருளாளர் பழனிஅய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்துக்கு பின் சாமி.நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போது பெய்துவரும் மழையால் தாழ்வான பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் தண்ணீரில் மூழ்கி சாய்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் முற்பட்ட சம்பா நடவு, மற்றும் நேரடி விதைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், இந்தாண்டு ஏறத்தாழ 5.20 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்ய நிறுவனம் முன்வரவில்லை என மாநில அரசு தெரிவித்தது. இதனால் குறுவைக்கான பயிர் காப்பீடும் செய்ய இயலவில்லை. பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநில அரசு ஈடுசெய்யும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. எனவே, அறுவடை பாதிப்பு மற்றும் பயிர் பாதிப்புகள் குறித்து உடன் கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்.
தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 21 சதவீதம் அனுமதிக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை களைந்திட வேண்டும். மத்திய அரசின் உணவுத்துறை செயலாளர் சுதன்ஷீபாண்டே உணவு தானிய கொள்முதலில் தனியாரை கொண்டுவர விரும்புவதாகவும், தேவையை விட கூடுதலாக கொள்முதல் செய்வதாகவும், கொள்முதல் செலவுகளை குறைத்திட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசு கொள்முதலை நிறுத்த முயற்சிப்பதை கண்டிக்கிறோம். தமிழக அரசு மத்திய அரசின் இத்திட்டத்தை நிராகரிக்க வேண்டும். சம்பா நடவுப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் இப்போதே யூரியா உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே நிலைமையை உணர்ந்து சாகுபடி பணிகள் தடைபடாத வகையில் உரம் வழங்கிட முன்வர வேண்டும்.
செயற்கை பற்றாக்குறை ஏற்படுத்தி விலையேற்றம் ஏற்படுவதை தடுத்திடவும், பிற பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை தடுத்திட வேண்டும். செயற்கையாக உரப் பற்றாக்குறை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு நான்கு வழி சாலை அமைப்பதற்காக விளைநிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து போராடிய விவசாயி ஜெயராமன் மீது எவ்வித வழக்குகளும் இல்லாத போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாக உள்ளது. இதற்கு காரணமான தென்காசி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பல இடங்களில் விலை நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு இதில் அலட்சியமாக செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்துக்கு விவசாயம், குடிநீர் ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் அணையில் நடு மதகு கடந்த 21ம் தேதி உடைந்தது. இதனால் 6 டிஎம்சி தண்ணீர் பயனற்று போய் விட்டது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமான நடவடிக்கையே காரணமாகும். கோடை காலத்தில் அணை முறையாக பராமரிக்கப்படவில்லை. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அணைகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய சிறப்பு வல்லுநர் குழு அமைத்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.