DMDK Meeting: மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் : தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்..
இன்று நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.15,000 வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு தேமுதிக தலைவர் விஜயகாந்த மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, தேமுதிக தொண்டர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேமுதிக தலைவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் குணமடைய பிரார்தனை செய்த அனைவருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழுவில், “சமீபத்தில் தமிழக தலைநகரையே புரட்டிப் போட்ட மிகஜாம் புயலால் தமிழகம் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. தமிழக மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். எத்துணை அளவிலும் அவர்களது துயரத்தை அளவிட முடியாது. அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் தேமுதிக என்றைக்குமே துணைநிற்கும் என்ற வாக்குறுதியோடு, பாதித்த மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.15000/-மும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சமும், உடனடியாக வழங்க வேண்டும் என தேமுதிக பொதுக்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது. எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் எத்தனை பேரிடர் வந்தாலும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத வண்ணம், தண்ணீர் தேங்கமால் தொலைநோக்கு பார்வையோடு நிறைவான நிரந்தரவடிகால் அமைத்து செயல்பட சரியான திட்டமிட்டு, உடனடியாக செயல்பட தேமுதிக பொதுக்குழு உடனடியாக கேட்டுக்கொள்கிறது.
மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரத்தை தகுதியான மகளிருக்கு மட்டும் தான் என்ற திமுகவின் அறிவிப்பு, மகளிர்களை பாகுபடுத்தி பிரித்து பார்க்க தேமுதிக ஒருபோதும் அனுமதிக்காது. எனவே மகளிர் குடும்பத்தலைவி உரிமைத் தொகையான ரூபாய் ஆயிரத்தை உடனடியாக அனைவருக்கும் வழங்க திமுக அரசை இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.
நாளைய மண்ணில் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்குகின்ற வகையில், தம் பணிகளை சிறப்பாக செய்கின்ற ஆசிரியர்களை தேமுதிக பாராட்டுகிறது. அவர்கள் பணிகளை அங்கீகரிக்கின்ற வகையிலும், சிறப்பான பாராட்டை நல்கின்ற வகையிலும், ஆசிரியர் போராட்டத்தினை முடிவு காணுகின்ற வகையில் அவர்கள் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றிட இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
திமுக அரசு பதவி ஏற்றவுடன் மக்களுக்கு கொடுத்த முதல் பரிசு எல்லாவிதமான வரிகளை ஏற்றியதுதான். மின் கட்டண உயர்வு, சொத்து வரி, குடிநீர் வரி, கழிவு நீர் வரி, பால் விலை உயர்வு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியும், எல்லாவிதமான வரிகளை 200% உயர்த்தி மக்களுக்கு மிகப்பெரிய துன்பத்தை உண்டாகியதுதான் திமுக அரசின் மிகப்பெரிய சாதனை. இத்தனை வரிகளையும், பால்விலை உயர்வையும் குறைத்து, பழைய நிலைக்கு திரும்ப மக்களின் சீரான வாழ்க்கைக்கு குடிநீர், சாலை பராமரிப்பு போன்றவற்றை மக்களுக்கு வழங்கிட இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது” என பல்வெறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக, மக்களின் முழுமையான கருத்துக்களை கேட்டறிந்து, விளை நிலங்களை தவிர்த்து தரிசு நிலங்களில் அமைத்திடவும், மேற்படி நிலங்களுக்கு நஷ்ட ஈடாக மார்கெட் விலைக்கு இரண்டு மடங்கு தொகை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்தோடு, தமிழகத்தில் சிறிய பெண்குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையினால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதிப்படைவதால், போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.