Thoothukudi: அரசு வழங்கும் மானிய இடு பொருட்களின் விலை கூடுதல் - புலம்பும் விவசாயிகள்
முந்தைய அரசு பொருளின்றி விவசாயிகளுக்கு நேரடி மானியமாக பணம் வழங்கியது போல். தற்போதும் அதே நடைமுறையை பின்பற்றி வழங்க வேண்டும்.
வெளிச் சந்தையில் மானியமின்றி கிடைக்கும் விலையை விட கூடுதலாக அரசு மானியத்தில் வழங்கும் இடுபொருட்களை இருப்பதால் வாங்க ஆர்வம் காட்டாத விவசாயிகள், முந்தைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் போன்ற பன்னிரெண்டு வட்டாரங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இரு விதமான விவசாயம் செய்யப்படுகிறது. அதில் வட பகுதி பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகும். தென்பகுதி வாழை, நெல் பயிரிடக்கூடிய பாசன வசதி கொண்டவையாகும்.
வானம் பார்த்த மானாவாரி பூமியில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே சிறுதானியங்கள், பயறு வகைகள், பணப்பயிர்கள், வத்தல், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி போன்றவைகள் பயிரிடப்படுகிறது. நம் முன்னோர்கள் பன்னெடுங்காலமாய் செய்து வந்த விவசாய முறையையே தற்போதும் விவசாயிகள் செய்துவந்தனர். இதனால் போதிய இலாபமின்மையால் விவசாயம் நலிவடைந்து வந்தது. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், சில பயிர்கள் குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே விளைந்ததை அனைத்து நிலங்களிலும் அனைத்து காலத்திலும் விளைவதற்கு ஏற்றவாறு பல்வேறு தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்துகாட்டி விவசாயிகளை வேளாண்மைதுறை ஊக்கப்படுத்தியது. சிறுகுறு விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கு மானியத்தில் உரம், மருந்து, பல்வேறு இடு பொருட்கள் வழங்கி வருகிறது. தவிர கடந்த காலங்களில் விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள், மருந்துகள் வாங்க விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கியது. சாகுபடிக்குரிய செலவு, மற்றும் இழப்பை ஈடுகட்ட முடியாவிட்டாலும் ஓரளவுக்கு அம்மானியம் உதவியாக இருந்தது.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, “தமிழகத்தில் பொறுப்பேற்ற அரசு விவசாயிகளுக்கு உரம் மானியம், விதை மானியம், உழவு மானியம் என வழங்கியதை நிறுத்தம் செய்து, தற்போது அரசு நேரடியாக கம்பெனிகளிடம் விதை, உரம், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான், விவசாய கருவிகள், உயிர் உரம், நுண்ணூட்ட உரம், இயற்கை உரம், போன்றவைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் வழங்கி வருகிறது. மானியத்தில் வழங்கப்படும் பொருட்கள் வெளிச்சந்தையில் சில்லரை விலையைவிட குறைவாக இருப்பதாலும், அதன் தரமும் கேள்விக்குறியாக இருப்பதாலும் விவசாயிகள் அதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தவிர கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடப்பாறை கம்பி, மண்வெட்டி, தட்டு, களைக்கொத்தி, கதிர் அரிவாள் அடங்கிய தொகுப்பு அரசு மானியம் போக ரூ. 800க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மானியம் போக ரூ 1533/ = என விலைக்கு விற்கப்படுகிறது.தவிர தார்ப்பாய்கள் வெளிச்சந்தையை காட்டிலும் விலை கூடுதலாக உள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீர்நிதி எனப்படும் உரம் முழு மானியத்தில் வழங்கப்பட்டாலும் அதனுடன் உயிர் உரம் திரவம் 50% மானியத்தில் லிட்டர் ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிகிறது. இதுபோன்று வேளாண்மை துறையில் அரசு மொத்தமாக கொள்முதல் செய்து விற்கப்படும் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்காமல் சில்லரையில் வெளிச் சந்தையை விட விலை அதிகமாக இருப்பதால் அதனை விவசாயிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் பல இலட்சம் ரூபாயில் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனையாகாமல் உரம், மருந்து, விவசாய கருவிகள், இயற்கை உரம், விதை, தெளிப்பான்கள் வேளாண்மைதுறை குடோன் முழுவதும் நிரம்பி வழிகின்றன. அதனை விவசாயிகளிடம் விற்பனை செய்யுமாறு உதவி வேளாண் அலுவலர்களை மேலதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். தவிர ஒவ்வொரு உதவி வேளாண் அலுவலர்களுக்கும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது விவசாயிகளிடம் பொருட்களை வாங்குமாறு கூறுகின்றனர். முந்தைய அரசு பொருளின்றி விவசாயிகளுக்கு நேரடி மானியமாக பணம் வழங்கியது போல். தற்போதும் அதே நடைமுறையை பின்பற்றி வழங்க வேண்டும்” என என்கிறார்.