"மயிலாடுதுறை விவசாயிகள் கண்ணீர்" மீண்டும் மீண்டும் மழையில் நனைந்து பாழாகும் நெல் மூட்டைகள் - கண்டுகொள்ளாத அரசு..!
மயிலாடுதுறை மாவட்டம் திருப்புங்கூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருப்புங்கூரில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் பணிகள் தாமதமாக நடப்பதால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருவதால், உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைத்தளம் இல்லாத அவலம்
சீர்காழி தாலுக்காவை சேர்ந்த திருப்புங்கூர், கற்கோவில், தொழுதூர், கன்னியாகுடி போன்ற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல் மூட்டைகளை இந்த திருப்புங்கூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், இந்த கொள்முதல் நிலையம் திறந்த வெளியில் எந்தவிதமான தரைத்தள வசதியும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் நெல் மூட்டைகளை மணல் தரையில் குவித்து வைக்கும் நிலை இருந்து வருகிறது.

தாமதமும், பணியாளர் பற்றாக்குறையும்
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யாமல், பல நாட்கள் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கொள்முதல் நிலையத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததே என கூறும் விவசாயிகள், நாளொன்றுக்கு குறைந்த அளவிலான நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், நூற்றுக்கணக்கான மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி நிற்கின்றன. கடந்த 10 நாட்களாக நெல்லை கொண்டு வந்த விவசாயிகள், கொள்முதல் எப்போது நடக்கும் என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மழையால் நனைந்து முளைக்கும் நெல் மணிகள்
இந்த தாமதத்தின் விளைவாக, கடந்த சில நாட்களாக சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முற்றிலும் நனைந்து சேதமடைந்துள்ளன. விவசாயிகள் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்க தார்ப்பாய்களை கொண்டு மூடி வைத்தாலும், தரைத்தளம் இல்லாததால் மழைநீர் மண்ணின் வழியாக ஊடுருவி நெல்லை சேதப்படுத்துகிறது. இதனால், பல நெல் மூட்டைகளில் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

கனமழையில் நனைந்துவிட்ட நெல் மூட்டைகளை காக்க விவசாயிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஒருபக்கம், தாங்கள் கடினமாக உழைத்து விளைவித்த பயிர் வீணாவதைக் கண்டு வேதனையில் உள்ளனர். மறுபுறம், ஒரு மூட்டை நெல்லுக்குக் கூட லாபம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
"நாங்கள் பல வாரங்களாக இந்த நெல்லைப் பாதுகாத்து வருகிறோம். ஆனால், இவ்வளவு கடின உழைப்பும் ஒரே மழையில் வீணாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது," என ஒரு விவசாயி கண்ணீருடன் தெரிவித்தார்.

அரசுக்கு அவசர கோரிக்கை
இந்த அவலநிலை நீண்ட காலமாகவே தொடர்ந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். "ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். ஆனால், அரசு இதற்கென நிரந்தரத் தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை," என அவர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் முன், இந்த கொள்முதல் நிலையத்தில் உடனடியாக கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாதவாறு, கொள்முதல் நிலையத்திற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மேற்கூரை மற்றும் தரைத்தளம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இல்லையென்றால், விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என வேதனை தெரிவித்துள்ளனர்.






















