TVK Vijay: கூட்டம் எல்லாம் சரிதான்.. ஓட்டுக்களாக மாறுமா? எப்படி மாற்றப்போகிறார் விஜய்!
நடிகர் விஜய்யை காண்பதற்காக நேற்று தொண்டர்களும், ரசிகர்களும் லட்சக்கணக்கில் குவிந்த நிலையில் விஜய் தரப்பு அதை ஓட்டுக்களாக எப்படி மாற்றப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்த தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிப்பதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய்.
தேர்தல் பரப்புரையில் விஜய்:
தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக திகழும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், தொடக்கத்தில் தனது அரசியல் களத்தில் மென்மையான போக்கை கையாண்டு வந்த நிலையில் தற்போது தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார்.
மதுரை மாநாட்டிற்கு பிறகு தனது அரசியல் களத்தை தீவிரப்படுத்தியுள்ள நடிகர் விஜய் நேற்று முதன்முறையாக மக்கள் சந்திப்பில் களமிறங்கியுள்ளார். விஜய்யின் மக்கள் சந்திப்பு தற்போது அரசியல் களத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
லட்சக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்:
ஏனென்றால், நேற்று பலரும் எதிர்பார்த்ததை காட்டிலும் அதைவிட அதிகளவு ரசிகர்கள் மற்றும் மக்கள் கூட்டம் விஜய்யை பார்க்க குவிந்தனர். திருச்சியில் இருந்து விஜய் விமான நிலையத்தை விட்டு பரப்புரை செய்வதற்கான மரக்கடை பகுதிக்கு வருவதற்கே அவருக்கு 4 மணி நேரத்திற்கு மேலானது.
விஜய்யை காண்பதற்காக விமான நிலையத்தில் காலை முதலே குவிந்தனர். மேலும், விஜய் திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியிலும் அவர் பின்னாலே தொண்டர்கள் படை திரண்டு சென்றனர். அரியலூரில் இரவை கடந்தும் விஜய்யின் பேச்சை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.
கூட்டம் ஓட்டுக்களாக மாறுமா?
விஜய்க்காக குவிந்த கூட்டம்தான் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும், அதிர்வலையையும் உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புதியதாக அரசியல் களத்தில் குதிக்கும் பிரபலங்களுக்காக கூட்டம் என்பது பன்மடங்கு குவியும் என்பது உண்மை. ஆனால், அந்த கூட்டம் ஓட்டுக்களாக மாறுமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாகும்.
விஜய்யைப் பார்க்க கூடிய இந்த லட்சக்கணக்கான ரசிகர்களையும், தொண்டர்களையும் எப்படி தவெக ஓட்டாக மாற்றப்போகிறது? என்பதே அவர்கள் முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.
தவெக முன் உள்ள சவால்:
இது விஜய்க்கு நிச்சயம் மிகப்பெரிய சவால் ஆகும்.ஏனென்றால், தவெக-வைப் பொறுத்தமட்டில் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பதே அவர்களின் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. விஜய்க்கு அடுத்தபடியாக அவர்களது கட்சியில் வாக்கு சேகரிக்கவும், அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவும் யாரும் இல்லாமல் இருப்பதே பெரும் பின்னடைவாக உள்ளது. இதை விஜய் தரப்பு எப்படி சமாளிக்கப்போகிறது? என்பதே அவ்ர்கள் முன் உள்ள சவால் ஆகும்.




















