DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
தொகுதிப் பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ் குழு 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக வலுவான கூட்டணியுடன் வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறது.
மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் குழு சந்திப்பு:
திமுக கூட்டணியில் முதன்மையான கட்சியாக காங்கிரஸ் அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், செல்வப் பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, ராஜேஷ்வர்குமார் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து இந்த குழு பேசியது. இந்த சந்திப்பிற்கு பிறகு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனியாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிபந்தனைகள்:
இந்த சந்திப்பின்போது, ராகுல் காந்தி சார்பில் 3 நிபந்தனைகளை திமுக-விற்கு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது,
1. காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள 39 தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
2. தொகுதி ஒதுக்கீடு குறித்து வரும் 20ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்.
3. ஆட்சியில் பங்கு தர வேண்டும்
இந்த நிபந்தனைகளை காங்கிரஸ் சார்பில் திமுக-விற்கு விதித்துள்ளாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலினும் திமுக சார்பில் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்படும். அப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாெகுதி ஒதுக்கீடு:
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் பயணிப்பதாலே தனது வாக்கு வங்கியை வலுவாக வைத்து வருவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு அதில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக். மக்கள் நீதி மையம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என கூட்டணி கட்சிகள் உள்ளனர். திமுக இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது. இதனால், கூட்டணி கட்சியினருக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
சாத்தியமா?
இந்த சூழலில், காங்கிரஸ் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு திமுக சம்மதம் தெரிவிக்குமா? என்பது சந்தேகமே ஆகும். குறிப்பாக, ஆட்சியில் பங்கு என்பது நடக்கவே நடக்காத ஒன்று என்றே கூறப்படுகிறது. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை சமீபகாலமாக கூட்டணி கட்சிகள் வலுவாக வைக்கும் கோரிக்கையாக இருப்பதால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு புது நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.





















