எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
வேதங்கள் அதனை பாதுகாப்பவர்களை பாதுகாக்கும் என்று தொடங்கி, கோயிலில் எச்சில் இலைகள் மீது உருண்டு நேர்த்தி கடன் செலுத்துவது பக்தர்களின் விருப்பம் என்றும், வழக்கறிஞர் ஒருவரை காமெடி பீஸ் என்று நீதிமன்றதிலேயே விமர்சித்தது வரை சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் நீதிபதி ஜீ.ஆர் சுவாமிநாதன். இந்நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏத்த இவர் உத்தரவு பிறப்பித்ததால், உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து இவரை விடுவிக்க வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.. இந்நிலையில் யார் இவர் என்பதை விரிவாக பார்க்கலாம்..
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் 1968ம் ஆண்டு பிறந்தவர் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன். 1990ல் சட்டபடிப்பை முடித்த அவர், 13 ஆண்டுகள் சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொண்டு, பின்னர் மதுரை உயர்நீதிமன்ற கிழைக்கு இடம்பெயர்ந்தார்.
அனைத்து விதமான வழக்குகளையும் கையாண்ட ஜி.ஆர் சுவாமிநாதன் பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும், மதுரை பெஞ்சின் இந்திய உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தார். அதன் பின் ஜூன் 2017ல் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பொறுப்பெற்ற அவர், பின்னர் நிரந்தரமாக்கப்பட்டார். நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக, இரண்டு ஆண்டுகள் சேவையை நிறைவு செய்தவுடன், தன்னுடைய செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டை வெளியிட்டார்.
இந்நிலையில் பேச்சுரிமை, சிறைவாசிகளின் உரிமைகள், விலங்கு நலம், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல முக்கிய தீர்ப்புகளை இவர் வழங்கியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் குறைந்த காலத்தில் 52,094 தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை இவர் பிறப்பித்துள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது புகார்களும் விமர்சனங்களும் எழுவது, இது முதல் முறையல்ல. கோயிலில் எச்சில் இலைகள் மீது உருண்டு நேர்த்திக் கடன் செலுத்துவது தொடர்பான வழக்கில் ”இது தனக்கு ஆன்மிக பலத்தைத் தரும் என பக்தர்கள் நம்புகிறார்கள், அது தனிப்பட்ட ஒருவரின் ஆன்மிகத் தேர்வு. பாலினம், பாலியல் தேர்வு ஆகியவற்றுடன் ஆன்மிகத் தேர்வும் ஒருவரின் தனியுரிமையில் உள்ளடங்கியுள்ளது" என்று கருத்து தெரிவித்தார். இந்தத் தீர்ப்பின் மூலம் எச்சில் இலைகளில் உருளும் வழக்கத்தை நீதிபதி மீட்டெடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்தது, மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் புகார் கடிதம் அனுப்பபட்டது..
மேலும் லாவண்யா தற்கொலை வழக்கிலும், இன்னும் சில வழக்கில் மத ரீதியாக, சாதி ரீதியாக நீதிபதி ஜீஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்குவதாக விமர்சித்தார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர், அதற்காக அவரை நீதிமன்றத்தில் ஆஜார் ஆக சொன்ன நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதனை “கோழை.. காமெடி பீஸ்” என்று தன்னை விமர்சித்ததாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக தன்னுடைய நண்பர் சாஸ்திரி ஒருவர், வேதங்கள் கற்றதால் தண்டனையில் இருந்து விடுவிக்கபட்டதாக தெரிவித்து வேதங்கள் அதனை பாதுகாப்பவர்களை பாதுகாக்கும் என சொன்ன கருத்துகளும் சர்ச்சையை கிளப்பியிருந்தன..
இந்நிலையில் தான் நேற்றைய தினம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியும், துணைக்கு CISF பாதுகாப்பு வீரர்களை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அனுப்பி வைத்ததும் தமிழ்நாட்டில் புதாகரமாக வெடித்துள்ளது. இதில் நீதிமன்ற பாதுகாப்பிற்காக வந்திருக்கும் மத்திய பாதுகாப்பு படையை, மலையில் தீபம் ஏற்ற பாதுகாப்பு வழங்குமாறு அனுப்பி வைக்கப்பட்டதை கண்டித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் நீதிபதி ஜீ.ஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்..
இப்படி பட்ட சூழலில் தான் தற்போது பலர் நீதிபதி ஜீ.ஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்..





















