SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 85 லட்சம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் திரும்ப பெறாத நிலையில், 85 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களை நெறிமுறைப்படுத்த சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வருகிறது. எஸ்ஐஆர் எனப்படும் இந்த முறைக்கு கடும் எதிர்ப்பை எதிர்க்கட்சி தெரிவித்து வருகிறது.
எஸ்ஐஆர் படிவங்கள்:
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எஸ்ஐஆர் பணிகளுக்காக படிவங்கள் பூத் ஏஜெண்டுகள் மூலமாக ஒப்படைக்கப்பட்டு படிவங்கள் நிரப்பப்பட்டு திரும்ப பெறப்பட்டு வருகிறது. எஸ்ஐஆர் பணிகள் முடிவடைய இன்னும் 8 நாட்களே உள்ளது.
எஸ்ஐஆர் பணிகள் வரும் 11ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், வரும் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.37 கோடி பேருக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 99.33 சதவீதம் ஆகும். இந்த படிவங்களில் 5.18 கோடி படிவங்கள் சரிபார்க்கப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது.
85 லட்சம் வாக்காளர்கள்:
இந்த படிவங்களில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் 84.91 லட்சம் படிவங்களை இதுவரை திரும்ப பெற முடியவில்லை. 25.73 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்துவிட்டதாகவும், 39.28 லட்சம் வாக்காளர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. 8.95 லட்சம் வாக்காளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மொத்த 84.91 லட்சம் படிவங்கள் என்பது 13 சதவீதம் ஆகும். இதுவரை 13 சதவீத படிவங்கள் திரும்ப பெற முடியாததால் அவர்களால் வாக்காளர் பட்டியலில் சேர முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலில், எஸ்ஐஆர் பணிகள் இதுவரை முழுமையாக முடிவடையவில்லை. இதனால், அதற்குள் வாக்காளர் நீக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் கூற இயலாது. இந்த பட்டியலில் உயிரிழந்தவர்கள் 25.72 லட்சம் ஆகும். சென்னையில் மட்டும் இந்த எண்ணிக்கை 1.49 லட்சம் ஆகும். இவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க இயலாது. அவர்கள் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உயிரிழந்தவர்களாக காட்டப்படும் என்று தெரிவித்தனர்.
வாக்காளர்களைச் சேர்க்க நடவடிக்கை:
வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை சிறப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த முகாம் மூலமாக இடம் மாறிச் சென்றவர்கள் தாங்கள் தற்போது வசிக்கும் பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது இணையதளம் மூலமாக பெயர் சேர்க்கலாம்.
இதுவரை வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் திரும்ப பெறாத 85 லட்சம் வாக்காளர்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிடும் இறுதி வாக்காளர் பட்டியலைப் பொறுத்தே தமிழ்நாட்டில் வாக்காளர்கள் யார்? யார்? வட மாநிலத்தவர்களின் தாக்கம் இருக்குமா? என்பது தெரிய வரும்.
சமீபத்தில் பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. அவர்கள் தங்கள் தோல்விக்கு காரணம் எஸ்ஐஆர் என்று தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி எஸ்ஐஆர் செயல்பாட்டை வாக்கு திருட்டு என்று பகிரங்கமாக தெரிவித்து வருகிறார்.





















