Madurai: அடிக்கடி மின்தடை! வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சோகம் - உசிலம்பட்டியில் பரிதாபம்
உசிலம்பட்டியில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் விவசாயிகளால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.
உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் கிணற்றில் தண்ணீர் இருந்தும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகி, நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
வறட்சியிலும் விவசாய பணி:
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது. கடுமையான வறட்சி காரணமாக பல கிராமங்களில் பொதுமக்கள் குடி தண்ணீருக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த சூழலிலும் சில இடங்களில் விவசாயிகள் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். கிணறுகள் உதவியால் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு மின் தடை மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அடிக்கடி ஏற்படும் மின் தடை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திடியன், அம்பட்டையன்பட்டி, உச்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் கோடை சாகுபடியாக நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் நெல்மணிகள் வைக்கும் பால் பருவத்தில் வளர்ந்துள்ள சூழலில்., கடந்த 20 நாட்களாக உசிலம்பட்டி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடை மற்றும் மின்சாரம் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகளால் கிணறுகளில் தண்ணீர் இருந்தும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் எந்த நேரம் மின்சாரம் வரும், எந்த நேரம் மின்சாரம் தடைபடும் என விவசாயிகள் கணிக்க முடியாத நிலையும், பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
நெற்பயிர்கள் கருகி சேதமடையும் நிலை
மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லாத நிலை நீடிப்பதால் ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் கருகி சேதமடையும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு செய்து இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய உள்ள நெற்பயிர்கள் மின்தடை மற்றும் மின்சாரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து மின்தடையை சரி செய்யவும், மின்சாரம் வழங்குவதை முறைப்படுத்தி நெற்பயிர்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pamban Bridge: புதிய பாம்பன் பாலப் பணிகள் எப்போது முடியும்? ; பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - முழு தகவல் இதோ
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சிவகங்கை : கண்மாய் மடையை வழிபடும் கிராம மக்கள்.. 280 கிடாய் வெட்டி விருந்துண்டு மகிழ்வு..