திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி - வேளாண் துறை அதிகாரிகள்
திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தகவல்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட பருவ மழை நன்கு பெய்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியிலேயே நீடித்தது. அதேபோல் கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. தொடர்மழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா சாகுபடி 50 ஆயிரம் ஹெக்டேராக ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் நகர், கல்லிக்குடி, மாந்துரை, அபிஷேகபுரம், கூகூர், தண்ணியம், முள்ளால், செம்பரை, காட்டூர், பூவாளூர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மண்ணச்சநல்லூர், நொச்சியம், கிளியநல்லூர், எதுமலை, மணிகண்டம் வட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, பூங்குடி, மணிகண்டம், திருவெறும்பூர் வட்டத்தில் வேங்கூர், கீழகல்கண்டார் கோட்டை, முசிறி வட்டத்தில் அய்ய ம்பாளையம், குணசீலம், புத்தனாம்பட்டி, தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தர், தொட்டியம், உப்பிலியபுரம் வட்டத்தில் எரகுடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கியுள்ளது.
நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும். ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்க வேளர்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு உரங்கள் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்தும், போதிய அளவு உரங்கள் வழங்கவும் வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காலி உர சாக்குகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தாண்டு நல்ல பெய்து வருவதாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்ந்து வருவதாலும் சம்பா சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 ஆயிரம் ஹெக்டேர் வரையில் சம்பா சாகுபடி நடைபெறும் என வேளாண்மைத்துறையினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகேசன் கூறுகையில், மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு சம்பாவுக்கும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மழையும் பரவலாக பெய்து வருவதால் சம்பா சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும், விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் மூலம் 20 கிலோ சான்றளிக்கப்பட்ட விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கி வருகிறோம். திருச்சி-3 கோ.ஆர்.50, டி.கே.எம்.13, விஐடி1 ஆகிய நெல் ரகங்கள் உயிர் உரங்கள் வழங்கப்படுவதுடன் விதை நேர்த்தி செய்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு 330 மெட்ரிக் டன் விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 50 சதவீத விதைகள் பல்வேறு மானியத் திட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்ய அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி மகசூலை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்