மேலும் அறிய
விவசாய விளைபொருள்களுக்கு ஆதார விலை: வாக்குறுதி என்னாச்சு? எம்.பி சு. வெங்கடேசன் கேள்வி, அமைச்சரின் பதில் என்ன சொல்கிறது?
எம். எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைக்குமான இடைவெளி எவ்வளவு வருமானத்தை விவசாயிகளிடம் இருந்து பறிக்கிறது என்று பல ஆய்வுகள் வெளி வந்துள்ளன.

சு.வெங்கடேசன்
விவசாய விளைபொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயம் விவசாயிகளுக்கு தந்த வாக்குறுதி என்ன ஆச்சு? - சு.வெங்கடேசன்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..,”
சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு அமைச்சர் பதில் ” நாடாளுமன்றத்தில் ஒன்றிய வேளாண்மை அமைச்சகத்திடம் விவசாய விளை பொருளுக்கு ஆதார விலையை, விவசாய அறிஞர் எம். எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின்படி சி 2 + 50 % என்ற அடிப்படையில், அமலாக்குவதாக விவசாயிகள் போராட்டத்தின் போது அரசு தந்த வாக்குறுதியின் நிலைமை என்ன? இக் கோரிக்கை நிறைவேற்றப்பட என்ன கால வரையறை? என்ற கேள்வியை (எண்: 355 டிசம்பர் 2, 2025) எழுப்பி இருந்தேன்.
அமைச்சர் பதில்
இதற்கு பதில் அளித்த ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. ராம்நாத் தாகூர், "ஒவ்வொரு ஆண்டும், மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) பரிந்துரைகளின் அடிப்படையில், 22 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அரசு நிர்ணயிக்கிறது.
பேரா எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் 2004 இல் அமைக்கப்பட்ட தேசிய விவசாயிகள் ஆணையம் (NCF), குறைந்தபட்ச ஆதரவு விலையானது (MSP) சராசரி உற்பத்திச் செலவை விடக் குறைந்த பட்சம் 50 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இப்பரிந்துரையைச் செயல்படுத்தும் வகையில், 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், உற்பத்திச் செலவை விடக் குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு (1.5 மடங்கு) என்ற அளவில் எம்.எஸ்.பி (MSP) இருப்பதை ஒரு முன்-தீர்மானிக்கப்பட்ட கொள்கையாக அரசு அறிவித்தது. அதன்படி, அனைத்து காரீஃப், ராபி மற்றும் பிற வணிகப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையானது, சராசரி உற்பத்திச் செலவை விடக் குறைந்தது 50 சதவீதம் கூடுதல் வரம்பு (margin) இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பரிந்துரைக்கும் போது, உற்பத்திச் செலவு, ஒட்டுமொத்த கிராக்கி - விநியோக நிலவரம், உள்நாட்டு மற்றும் சர்வதேச விலைகள், பயிர்களுக்கு இடையிலான விலை சமநிலை, விவசாய மற்றும் விவசாயம் சாராத துறைகளுக்கு இடையிலான வர்த்தக விதிமுறைகள் மற்றும் பொருளாதாரத்தின் பிற பகுதிகளின் மீதான தாக்கம் ஆகிய முக்கியக் காரணிகளுடன், நிலம், நீர் மற்றும் பிற உற்பத்தி வளங்களின் சீரான பயன்பாட்டை உறுதி செய்வதையும், உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தது 50 சதவீதம் கூடுதல் வரம்பு இருப்பதையும் சி.ஏ.சி.பி (CACP) கருத்தில் கொள்கிறது" என்று பதில் அளித்துள்ளார்.
சு.வெங்கடேசன் விமர்சனம்
"அமைச்சரின் பதில் உண்மைக்கு புறம்பானவற்றையும், அவரின் பதிலிலேயே முரண்களையும் கொண்டுள்ளது. 2018 -19 பட்ஜெட்டில் விவசாய அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமலாக்க தரப்பட்ட உறுதிமொழியை குறிப்பிடும் அமைச்சர், அதற்கு அடுத்த வரியிலேயே நிர்ணயிக்கப்பட்ட விலையாகச் சொல்லும் சூத்திரம் எம்.எஸ்.எஸ் குழு பரிந்துரைக்கு மாறானதாக உள்ளது. அடுத்த பத்தியில் குறைந்த பட்ச ஆதார விலையைத் தீர்மானிக்க விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் கணக்கில் எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ள பல்வேறு அம்சங்கள் எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைக்கு தொடர்பற்றவையாகவும், நீர்த்துப் போகச் செய்பவையாகவும் உள்ளன.
உரிய விடை கிடைப்பதில்லை
எம். எஸ் .சுவாமிநாதன் குழு பரிந்துரையில் குறிப்பிடப்பட்ட சி 2 + 50% என்பது பயிரின் மொத்த உற்பத்தி செலவு மற்றும் நிலத்திற்கான வாடகை, முதலீடு மீதான நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதம், குடும்ப உழைப்பு ஈடுபடுத்தப்பட்டு இருந்தால் அதன் மதிப்பு ஆகியவற்றுக்கான அனுமான செலவுகள் கணக்கிடப்பட்டு அதை விட 50 சதவீதம் கூடுதலாக தர வேண்டுமென்பதே. இது வழங்கப்படுகிறதா என்பதற்கு அமைச்சர் நேரடியாக பதில் அளிக்கவில்லை, ஆனால் தரப்படவில்லை என்பதையே அவர் தந்துள்ள விவரங்கள் நிரூபிக்கின்றன. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தரப்பட்ட வாக்குறுதி பற்றி எந்தக் குறிப்பும் அமைச்சரின் பதிலில் இல்லாதது ஏன்? அந்த வாக்குறுதியையே அரசு மறந்து விட்டதா? விவசாய சங்கங்கள் தலையீட்டையே அரசு விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடா? அரசு ஏதோ விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றி விட்டது போன்ற பாவனையை இந்த பதில் செய்வது உண்மையானால், விவசாய சங்கங்களிடம் விளக்கி போராட்டங்களை தொடராமல் பார்த்திருக்க முடியுமே? இந்த அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பினால் நமக்கு உரிய விடை கிடைப்பதில்லை. மாறாக அவர்களின் பதிலில் இருந்து நமக்கு கூடுதல் கேள்விகளே எழுமென்பது அனுபவம். அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலைக்கும், எம். எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைக்குமான இடைவெளி எவ்வளவு வருமானத்தை விவசாயிகளிடம் இருந்து பறிக்கிறது என்று பல ஆய்வுகள் வெளி வந்துள்ளன. ஆகவே அமைச்சரின் பதில் தவறான சித்திரத்தை தருவதாக, முரண்களின் மொத்த உருவமாக இருக்கிறது." என்று சு.வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















