Karthigai Deepam 2025: சிவாய நம.. நாளை கார்த்திகை தீபம்.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்!
Tiruvannamalai Karthigai Deepam 2025: கார்த்திகை தீபம் நாளை(03-12-2025) கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகிறது.

சிவபெருமானின் பஞ்சபூதங்களில் முக்கியமான தலமாக இருப்பது திருவண்ணாமலை. கார்த்திகை மாதம் பிறந்தாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபமே ஆகும். ஏனென்றால், திருவண்ணாமலையில் கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும், மலையில் ஏற்றப்படும் மகாதீபத்தையும் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.
நாளை கார்த்திகை தீபம்:
நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, நாளை மகாதீபம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 24ம் தேதி திருவண்ணாமலையில் தீபத்திற்கான கொடியேற்றம் நடந்தது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை களைகட்டி காணப்படுகிறது.
பரணிதீபம்:
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை அதிகாலையிலே 4 மணியளவில் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதையடுத்து, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து கொடி மரம் வரை நடனமாடியபடியே 6 மணியளவில் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது, கோயிலில் சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். பின்னர், கோயிலில் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
மகா தீபம்:
இதைத் தொடர்ந்து பக்தர்கள் ஆரவாரத்துடன் மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் ஏற்றப்பட உள்ள இந்த மகா தீபத்திற்காக கொப்பரை கொண்டு செல்லப்பட உள்ளது. 6 மணிக்கு இந்த மகா தீபத்தை மலையைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும் சிவாய நம என்று விண்ணைப் பிளக்க பக்தர்கள் கரங்களை கூப்பி வணங்குவார்கள்.
இந்த மகாதீபத்தை காண தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். இந்த மகாதீபத்தை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பிற்காகவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறப்பு பேருந்துகள், ரயில்கள்:
பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, திருப்பூர், மதுரை, கோவை, நெல்லை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.
கிரிவலம்:
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களாகவே கொண்டாட்டமாக உள்ளது. பொதுவாக, கார்த்திகை தீபத்தன்று அல்லது தீபத்திற்கு அடுத்த நாள் பெளர்ணமி வருவது வழக்கம். அன்றைய நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் காலை 7.18 மணிக்கு பெளர்ணமி தொடங்குகிறது. இதனால், கார்த்திகை தீப நாளிலும், அதற்கு அடுத்த நாளிலும் கிரிவலப் பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு மலைமீது பக்தர்கள் ஏறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபம் சிவாலயங்களில் மட்டுமின்றி முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.





















