H1B விசா இனி ரூ.88 லட்சம்! இடியை இறக்கிய ட்ரம்ப்! ஷாக்கில் இந்தியர்கள்
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்கான H1B விசா கட்டணத்தை 88 லட்சமாக உயர்த்தி இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
வெளிநாடுகளில் அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கு H1B விசா வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருப்பவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்த வேண்டுமென்றால் H1B விசாவுக்கான கட்டணம் செலுத்தும் நடைமுறை இருக்கிறது. குறிப்பாக தொழில்நுட்பம், இன்ஜினியரிங் , மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்த விசாவை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் ஏராளமனோர் வேலை பார்த்து வருகின்றனர்.
H1b விசா 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இது தற்காலிக விசாவாக இருந்தாலும் இதனை வைத்து அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறவும் விண்ணப்பித்து வருகின்றனர். 2வது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் குடியுரிமை விதிகளை கடுமையாக்கி வருகிறார்.
அந்தவகையில் H1b விசாவுக்கான கட்டணத்தை அதிக அளவில் உயர்த்தி குண்டை தூக்கி போட்டுள்ளார் ட்ரம்ப். H1b விசாவுக்கான கட்டணம் 1 லட்சம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1.32 லட்சமாக இருந்த இந்த கட்டணம் ஒரே அடியில் 88 லட்சமாக உயர்ந்துள்ளது. புதிதாக விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இனி 88 லட்சம் விதிக்கப்படும். அதேபோல் ஏற்கனவே அமெரிக்காவில் வேலை பார்த்து கொண்டிருப்பவர்களுக்கும் இது தலைவலியாக மாறியுள்ளது. ஏனென்றால் 3 ஆண்டுகள் விசா காலம் முடிந்த பிறகு அதனை நீட்டிப்பதற்கும் இனி அதிக அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த புதிய விதியால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் . முக்கியமாக ஐடி துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதியுதவி செய்யும் இந்த விசா மூலம் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 2020-2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட மொத்தமாக வழங்கப்பட்ட H1b விசாக்களில் 71 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்கின்றனர். கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது இவ்வளவு பெரிய தொகையை செலுத்தி நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்துவது கடினம். அதனால் ஏராளமோர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்ற குரல் அமெரிக்காவில் எழுந்துள்ளது. வெளிநாட்டவர்கள் குறைவான சம்பளத்தில் அமெரிக்காவில் பணியமர்த்தப்படுவதால் சொந்த நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பில் சிக்கல் வருவதாக சொல்கின்றனர். அதற்கு முடிவுகட்டும் விதமாகவே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அதிபர் ட்ரம்ப், நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் தேவை, எங்களுக்கு சிறந்த தொழிலாளர்கள் தேவை. இந்த பிரகடனம் அமெரிக்கா இப்போது நல்ல தொழிலாளர்களைப் பெறும் என்பதை உறுதி செய்கிறது. தொழில்நுட்பத் துறை இந்த நடவடிக்கையை எதிர்க்காது என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.





















