”தூங்குறவர வெட்டிட்டாங்க! 7 வயசுல குழந்தை இருக்கு” கதறி அழும் மனைவி
”தூங்குறவற வெட்டிக் கொன்னுருக்காங்க மேடம், எனக்கு 7 வயசுல குழந்தை இருக்கு” என திருப்பூர் காவல் ஆணையரிடம் கொலை செய்யப்பட்டவரின் மனைவி கதறி அழுத சம்பவம் பார்ப்போரையும் கண்கலங்க வைத்தது.
திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கோவையில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் செந்தில் குமார் என்பவர், திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது பெற்றோர் தெய்வசிகாமணி, அலமேலு அவிநாசிபாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று நள்ளிரவில் அவர்களது தோட்ட வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தையும் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் இருந்த 8 பவுன் நகைகள் மற்றும் சில பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. 3 பேரும் கூர்மையான கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நகைக்காக இந்த கொலை நடந்துள்ளதா அல்லது முன்பகை ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார். செந்தில் குமாரின் மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அவர் அப்போது அழுது கொண்டே கோபமாக காவல் ஆணையரிடம் பேசியது அனைவரையும் கலங்க வைத்தது.