பாடிபில்டர் TO நோயாளி! ரோபோ-வின் கடைசி வார்த்தை! குடிப்பழக்கத்தால் வீழ்ந்தது எப்படி?
திறமையான பாடிபில்டர், மிஸ்டர் மதுரை, கட்டுமஸ்தான உடல் என வலம் வந்த ரோபோ சங்கரின் வாழ்க்கையை குடிப்பழக்கம் தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. குடிப்பழக்கம் மட்டுமல்லாமல் வேறு சில பிரச்னைகளாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக போனதாக சொல்கின்றனர்.
எதார்த்தமான நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரோபோ சங்கர். தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சின்னத்திரையில் இருந்து திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரம் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பாடி பில்டராக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். ரோபோ சங்கர் ஐந்து முறை மிஸ்டர் மதுரை பட்டத்தை வென்றுள்ளார். மிஸ்டர் மெட்ராஸ் உட்பட பல பாடிபில்டிங் போட்டிகளில் அவர் பட்டங்களை வென்றுள்ளார். தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர். 2023ம் ஆண்டு நடந்த ஆணழகன் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோபோ சங்கர், 25 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமஸ்தான உடல் பாவனைகளை செய்துகாட்டி அசத்தினார்.
ஆனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிறகு அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் உடல் எடை மெலிந்து மோசமான நிலைக்கு போனார். பின்னர் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். குடிப்பழக்கத்தால் மரணத்தில் விளம்பு வரை சென்றுவிட்டதாக அவரே உருக்கமாக பேசியிருந்தார். படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பு வரை சென்றேன். அதற்கு காரணம் என்னிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள் தான். அதற்கு அடிமையாகி அந்த பழக்கத்தை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டேன். வாழ்க்கையையே வெறுத்து நடுநாத்திரியில் எழுந்து கிறுக்கனாக திரிய ஆரம்பித்தேன். கடைசியில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மீண்டு வந்து தற்போது நன்றாக இருக்கிறேன்” என சொல்லியிருந்தார்.
குடிப்பழக்கத்தால் எனது அப்பாவிற்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது, அடுத்த தலைமுறையினர் இந்த பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என அவரது மகள் இந்திரஜா கூறியிருந்தார். மஞ்சள் காமாலைக்கு பிறகு குடிப்பழக்கத்தை நிறுத்திய ரோபோ சங்கர் தினமும் உடற்பயிற்சி செய்து ஃபார்முக்கு வந்துள்ளார். இந்தநிலையில் அவரது இரைப்பை மற்றும் குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், பல உடல் உறுப்புகள் செயலிழந்ததால் சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனளிக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதோடு சேர்த்து ரோபோ சங்கரின் உடலில் பாதிப்பு ஏற்பட்டதற்கு வேறு ஒரு காரணமும் இருப்பதாக நடிகர் இளவரசு தெரிவித்துள்ளார். அதாவது ஆரம்ப காலத்தில் உடலில் சில்வர் பெயிண்ட் பூசி நடன மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் பங்கேற்றதாகவும், இந்த பெயிண்டை துடைப்பதற்கு மண்ணெண்ணெயை தான் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெயிண்ட் மண்ணெண்ணெய் பயன்படுத்தியதால் தோல் வலுவிழந்து மஞ்சள் காமாலை ஏற்பட்டதாக இளவரசு தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் 46 வயதிலேயே ரோபோ சங்கர் உயிரிழந்துள்ளது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




















