Sasikala: திமுகவில் இணைந்த ஓபிஎஸ்... சசிகலாவின் ரியாக்ஷன்? -அதிமுக-வின் எதிர்காலம் என்ன?
ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. இவர்மட்டும்தான் - சசிகலா

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததற்கு வி.சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது. ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சசிகலா புதிய கட்சியை தொடங்கினார். பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சசிகலா தொடங்கிய கட்சியின் ஒபிஎஸ் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை அவர் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் திமுகவில் இணைந்து சசிகலாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.























