”கதறிட்டு இருக்காங்க! விரக்திய கக்குறீங்களா” ஸ்டாலின் vs விஜய்
கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, மக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் கிடையாது திமுக என முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக் செய்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய்.
வரும் செப்டம்பர் 17ம் தேதி கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக செய்து வருகிறார். இந்தநிலையில் முப்பெரும் விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று உங்களில் ஒருவனான நானும், என்னுள் கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் சூளுரைக்கும் திருநாள்” என தெரிவித்திருந்தார். அதேபோல் கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து லட்சிய வீரர்களாகப் புறப்படுவோம் என்று விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் தவெக தலைவர் விஜய் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘'விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான்' என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர். இதை முன்கூட்டியே ஒப்புக்கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர். புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே பழந்தமிழ் மரபு? இன்னும் என்னென்னவோ வெறுப்பையும் விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் அக்கடிதத்தில் அழுதுகொண்டிருந்தன. வெளியே கொள்கை, கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவோடு உறவாடுவதும் யார் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக்கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன? பொய் வாக்குறுதிகளை அள்ளி அள்ளித் தெளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, கேள்வி கேட்டுத் தங்களது உரிமைகளுக்காகப் போராட வரும் அதே சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுபவர் யார் என்றும் தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?
தமிழகம் தாண்டியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உருவாகி இருக்கும் தன்னெழுச்சியான புத்தெழுச்சி, இப்போது அவர்களை ஏகத்துக்கும் குமுற வைத்துள்ளது. பொதுமக்களுக்கு இவர்கள் செய்யும் இடையூறுகள் அனைத்தையும் பற்றி, மக்களே கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். இடையறாமல் ஊறுகள் செய்வதையே கொள்கையாகக் கொண்ட இதயமற்ற இந்தத் தி.மு.க.விற்கு, கொள்கை. கோட்பாடுகளோடு மக்கள் விரும்பும் இயக்கம் ஒன்று எப்போது வந்தாலும் அதன் மீது கொள்கையற்ற கூட்டம் என்ற நமைச்சலையும் குமைச்சலையும் கொட்டுவது ஒன்றும் புதிதில்லை தானே? மாபெரும் மக்கள் சக்தியுடன் வந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும் 'அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்' என்றும் 'வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக்கொண்டிருப்பவர் என்றும் தங்கள் மனத்தில் மண்டிக் கிடந்த வெறுப்பு நெருப்பைக் கக்கியவர்கள்தானே இவர்கள்? அன்றே இவர்கள் இப்படித்தான். இன்று மட்டும் மாறிவிடுவார்களா?
மாபெரும் மக்கள் சக்தி, பெண்கள் சக்தி மற்றும் இளைஞர் சக்தியுடன் மக்களரசியலில் முதன்மைச் சக்தியாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் எப்படிக் குறைகூறாமல் இருப்பார்கள்?
யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் 1967, 1977 தேர்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றி விளைவை மக்கள் சக்தியின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் நிகழ்த்திக் காட்டும். நல்லதே நடக்கும்” என தெரிவித்துள்ளார்.





















