Sekar babu : "நோயாளி கோயிலுக்கு போகணுமா? ஸ்டாலின் பேச்சை கேட்காத சேகர்பாபு”கடுப்பில் விசிக,கம்யூனிஸ்ட்
திராவிட மாடல் அரசின் அமைச்சராக இருந்துகொண்டு அமைச்சர் சேகர்பாபு சனாதனத்தை தூக்கிப் பிடிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்கு முரணான விஷயங்களை சேகர்பாபு செய்வதாக கூட்டணி கட்சியினரே கடுப்பில் இருக்கின்றனர்.
பழனியில் அகில உலக முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு நடத்தினார். அதில், சனாதானத்தை தூக்கிப் பிடிக்கும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோரையும் பங்கேற்க வைத்தது சர்ச்சையை கிளப்பியது. அடுத்ததாக முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட 3 தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சஷ்டி நாட்களில் பள்ளி மாணவர்களை வைத்து கோயில்களில் கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது, பக்தி இலக்கியங்களின் பெருமைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு கூட்டணி கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த தீர்மானங்களை காஞ்சிபுரம் ஏகாம்பரதநாதர் பள்ளி, கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் அமைச்சர் சேகர் பாபு செயல்படுத்த தொடங்கியிருப்பதாக தமிழ்நாடு மாணவர் இயக்கம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது. திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முதலமைச்சர் செயல்படுத்தும் திட்டங்களுக்கு மாறாக சேகர்பாபுவின் நடவடிக்கை எடுப்பதாக விமர்சித்துள்ளனர்.
விசிக எம்.பி ரவிக்குமார் தனது பதிவில், ‘புதுமைப் பெண்’ திட்டத்துக்கு எதிராகப் ‘பழமைப் பெண்’ திட்டமா? தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போகவேண்டும் என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவரது நல்ல நோக்கத்துக்கு மாறாக பள்ளி மாணவிகளைப் பாராயணம் பாடச் சொல்லி ‘ பழமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு. கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ‘அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி, கல்லூரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்பது தவிர வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தனது பதிவில், இந்து அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில், மாணவிகளை பாராயணம் பாடச்சொல்லி கோவிலுக்கு அனுப்பும் அறநிலையத்துறை நிர்வாகமே, அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச்சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.