விஜய் போட்டியிடும் தொகுதி! V-ல் ஆரம்பிக்கும் 9 இடங்கள்! ஜோசியர் கொடுத்த ஐடியா
ஜோசியர் கொடுத்த ஐடியாவின் படி வி செண்டிமெண்ட்டை கையில் எடுத்துள்ள விஜய், தேர்தலில் போட்டியிடுவதற்கு 9 தொகுதிகளை தேர்ந்தெடுத்து சர்வே எடுக்க சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தமிழக அரசியல் களம் தீவிரமாக தயாராகி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக இருக்கும் நேரத்தில் புதிதாக எண்ட்ரி கொடுத்த தவெக தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது. அதுவும் கரூர் துயர சம்பவத்தால் சறுக்கிய தவெக, மீண்டும் தீவிர பரப்புரை, சுற்றுப்பயணத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு இதையெல்லாம் தாண்டி விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. விஜய்க்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தான் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தியதாகவும் பேச்சு இருக்கிறது. இந்த சூழலில், அவர் போட்டியிடும் தொகுதியும் வி என்ற எழுத்தில் தொடங்கும் தொகுதியாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர் சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் வி எழுத்தில் தொடங்கும் தொகுதிகளை லிஸ்ட் எடுத்து விவரங்களை சேகரிக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக சொல்கின்றனர். வில்லிவாக்கம், விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருதாச்சலம், வீரபாண்டி, விராலிமலை, விருதுநகர், விளாத்திக்குளம், விளவங்கோடு என வி-யில் ஆரம்பிக்கும் 9 தொகுதிகளை டிக் அடித்துள்ளதாக தெரிகிறது. இந்த தொகுதிகளில் எல்லாம் சர்வே எடுப்பதற்கான வேலைகளில் தவெகவினர் இறங்கியுள்ளார்.
இந்த தொகுதிகளில் விஜய்யின் செல்வாக்கு எப்படி இருக்கிறது பெண்கள், இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் எத்தனை பேர் என கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த தொகுதிகளில் திமுக, அதிமுகவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? எதிர்த்து களமிறங்குபவர்களின் வாக்கு வங்கி என்ன என்று விரிவான சர்வே எடுத்து ரிப்போர்ட் கொடுக்க சொல்லியிருக்கிறாராம் விஜய். கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் தவெகவின் செல்வாக்கு என்ன என்றும் சர்வே நடத்தப்பட்டு வருவதாக சொல்கின்றனர்.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை அதிகம் கொண்ட நடிகராக விஜய் இருப்பதால் பெண்கள், இளைஞர்கள் வாக்குகளை குறிவைத்தே விஜய் களமிறங்குவார். அதேபோல் விஜய் தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை எப்போது தொடங்கலாம்? என்பதையும் தனது ஜோதிடருடன் ஆலோசித்து வருவதாக சொல்கின்றனர்.





















