Thirumavalavan | அதிமுக - விசிக கூட்டணி? திருமா போடும் புதுக்கணக்கு! ஷாக்கான திமுக தலைமை! | DMK
அதிமுக பாஜக கூட்டணி தேர்தல் வரை நிலைக்காது என்று தொடர்ந்து கூறி வரும் திருமாவளவன், இதன் மூலம் தனக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்று மறைமுகமாக திமுக தலைமைக்கு சொல்கிறார் என்றும் தனக்கான டிமாண்டை கூட்டணிக்குள் உயர்த்துவதற்காகவே அவர் இவ்வாறு பேசி வருவதாகவும் சொல்கின்றனர்.
தமிழ் நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன. அந்த வகையில் ஆளும் திமுக தற்போது இருக்கும் கூட்டணியுடனே தேர்தலை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தேசிய ஜன நாயக கூட்டணியில் இணைந்த அதிமுக பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மறுபுறம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகம இன்னும் கூட்டணி தொடர்பாக அறிவிக்காமல் இருக்கிறது.
இந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அந்த கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதாவது, “தமிழ்நாட்டில் திமுக கூட்டணிதான் கூட்டணி என்ற வடிவத்துடன் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணி என்கிற ஒரு வடிவத்தையே இன்னும் எட்டவில்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலைச் சந்திப்போம் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியாது” என்றார். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூட,” அதிமுக - பாஜக கூட்டணி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அவர்கள் இன்னும் ஒட்டாமால் தான் இருக்கிறார்கள்” என்றார்.
இப்படி தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி குறித்து திருமாவளவன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதன் மூலம், ஒரு வேளை பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறினால். அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு தனக்கு இன்னும் இருக்கிறது என்பதை மறைமுகமக திமுக தலைமைக்கு சொல்கிறார் என்றும் இதன் மூலம் திமுக கூட்டணியில் தனக்கான டிமாண்டை உயர்த்துவதற்காகவே அவர் இவ்வாறு பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக, ”போவதற்கு வேறு இடமில்லாமல் திமுக கூட்டணியில் விசிக இல்லை. திமுகவை மட்டுமே நம்பி விசிக இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர்” என்று திருமாவளவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.




















