"243 தொகுதியில் தனித்து போட்டி” தேஜஸ்வி யாதவ் GAME STARTS! என்ன செய்யப்போகிறார் ராகுல்?
243 தொகுதியிலும் போட்டியிடப் போவதாக சொல்லி காங்கிரஸ்-க்கு ஷாக்கை கொடுத்துள்ளார் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ். ராகுல்காந்தி மீது தேஜஸ்வி யாதவ் அப்செட்டில் இருப்பதாகவும், தொகுதி பங்கீட்டில் 2 கட்சிகளும் மோதிக் கொண்டிருப்பதாகவும் சொல்கின்றனர். பீகாரில் காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி வந்துள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வருகிறது பீகார். நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை இந்த தடவை எப்படியாவது வீழ்த்தி ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என முடிவோடு இருக்கிறார் தேஜஸ்வி யாதவ். ஆனால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக இடங்களுக்கு காங்கிரஸ் குறிவைப்பது தான் பிரச்னைக்கான காரணம் என சொல்கின்றனர்.
2020 சட்டசபை தேர்தலில் 144 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அந்த தேர்தலில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதனால் வரும் தேர்தலிலும் காங்கிரஸுக்கு அதிகமான இடங்களை ஒதுக்க தேஜஸ்வி யாதவ் தயக்கம் காட்டுவதாக சொல்கின்றனர். ஆனால் வாக்கு திருட்டை அம்பலப்படுத்திய பிறகு பீகாரில் ராகுல்காந்தியின் கிராஃப் எகிறியுள்ளதால் அதிக இடங்களை கேட்டு காங்கிரஸ் வாதிடுகிறது. அதேபோல் மக்களவை தேர்தலிலும் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் ராகுல்காந்தி அமர்ந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நேரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று கேட்ட போது அதற்கு ராகுல்காந்தி பதிலளிக்காமல் நழுவி சென்றார். இது தேஜஸ்வி யாதவிற்கு அப்செட்டை கொடுத்ததாக சொல்கின்றனர். தொகுதி பங்கீடோடு சேர்த்து முதலமைச்சர் வேட்பாளர் விவகாரமும் 2 கட்சிக்குள்ளும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் பிரச்சாரத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், ‘நாங்கள் திரும்ப வருவோம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 243 தொகுதிகளிலும் நாம் போட்டியிடுவோம்” என சொல்லியுள்ளார். அப்படியென்றால் அனைத்து தொகுதிகளிலும் தேஜஸ்வி யாதவ் தனித்து களமிறங்குகிறாரா என்ற கேள்வி வந்துள்ளது. அதிலும் முசாஃபர்பூர், கண்ட்டி உள்ளிட்ட தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுங்கள் என சொல்லியுள்ளார். அதில் முசாஃபர்பூர் தொகுதி காங்கிரஸ் வசம் இருக்கிறது. அதனால் கூட்டணிக்கு குழப்பமா என விவாதம் நடந்து வருகிறது.
மற்றொரு பக்கம் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக தான் தேஜஸ்வி யாதவ் இப்படி பேசியிருப்பதாக சொல்கின்றனர். அதேபோல் தனக்கான பலத்தை காட்டி தொகுதி பங்கீட்டில் தனக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்காகவும் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ்-க்கு வார்னிங் கொடுக்கும் வகையில் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.





















