Sivaraman Death : EX-NTK சிவராமன் தற்கொலை அவர் தந்தையும் மரணம்! சேலத்தில் பரபரப்பு..
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தையும் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது இந்த வழக்கின் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள பர்கூர். இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற என்.சி.சி. முகாமில் 12 வயதான சிறுமிக்கு பயிற்சி அளித்த என்.சி.சி. பயிற்சியாளரால் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
பயிற்சி அளித்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பொறுப்பு வகித்த சிவராமன் போலியாக என்.சி.சி. பயிற்சி அளித்தது தெரியவந்தது. மேலும், அவர் அந்த மாணவியை போல மேலும் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இந்த விவகாரம் தெரிந்தும் பள்ளியின் முதல்வர் உள்பட பலரும் இந்த சம்பவத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவராமனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவராமனை கட்சியில் இருந்து நீக்குவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்தது. மேலும், பாலியல் தொல்லை அளித்த சிவராமன் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடியபோது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அப்போது, தான் கைது செய்யப்பட்ட 18ம் தேதி எலி மாத்திரையை சாப்பிட்டதாக மருத்துவரிடம் சிவராமன் கூறியுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது ரத்தத்தில் அதிகளவு விஷம் கலந்து இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். இந்த நிலையில், சிவராமனின் தந்தை அசோக்குமார் நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். கைது செய்யப்பட்ட சிவராமனும், அவரது தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விசாரணையை முடித்திட பவானீஸ்வரி ஐ.பி.எஸ். தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை முதலமைச்சர் அமைத்திருந்தார். அவர்கள் தங்கள் விசாரணைக்காக நேற்று கிருஷ்ணகிரி விரைந்திருந்த நிலையில், இன்று சிவராமன் உயிரிழந்துள்ளது இந்த வழக்கின் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாலியல் தொல்லை வழக்கில் மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.