Senji Masthan : எனக்கே ஸ்கெட்ச்சா?எகிறி அடித்த மஸ்தான்! அச்சத்தில் பொன்முடி?
செஞ்சி மஸ்தான் தனது பதவியை விசுவாசிக்கும், விசுவாசி பதவியை தனக்கும் மாற்றிக்கொண்ட சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் செஞ்சி மஸ்தானின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த திமுக தலைமை அவர் வகித்து வந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியை பறித்தது. மஸ்தானுக்கு பதில் திமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகருக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பதவி தரப்பட்டது. இது செஞ்சி மஸ்தானுக்கு திமுக தலைமை விடுத்த எச்சரிக்கை என எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, செஞ்சி மஸ்தான் மட்டும் தன்னுடைய திட்டத்தால், மாவட்ட செயலாளர் பதவி வேறு யாருக்கும் போய்விடாமல் தன்னுடைய ஆதரவாளரான சேகருக்கே அந்த பதவி வரும்படி சக்கர வியூகம் அமைத்து செயல்பட்டுவிட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடியை எதிர்த்து யாரும் திமுகவில் அரசியல் செய்ய முடியாது என்பது வரலாறு. ஆனால், செஞ்சி மஸ்தானுக்கும் பொன்முடிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துவந்த நிலையில், மஸ்தான் மீதான அடுக்கடுக்கான புகார்களால் அவரது மகன், மருமகன் உள்ளிட்டோரின் கட்சி பொறுப்பு அடுத்தடுத்து பறிக்கப்பட்டது. ஆனாலும், இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மஸ்தான், தன்னுடையை இருப்பை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவும் பல்வேறு வகையான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார் என்பது உடன்பிறப்புகளின் பேச்சாக இருக்கிறது.
இதில் முக்கியமாக, சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வகித்த பலமான பதவியான விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அந்த மாவட்ட பொறுப்பாளராக, மாவட்ட அவைத் தலைவரான சேகரை நியமித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார். ஆனால், தற்போது மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் சேகரே மஸ்தானின் ஆதரவாளர்தான் என்றும், இது செஞ்சி மஸ்தான் அதிகாரத்தை பொன்முடி ஆதரவாளர் யாருக்கும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக போட்ட ஸ்கெட்ச் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக சேகர் நியமிக்கப்பட்டார். அதனால், மாவட்ட அவை தலைவர் பதவி காலியாக இருந்தது. அந்த பதவிக்கு தேர்தல் நடத்த திமுக தலைமை அறிவித்த நிலையில், அதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் செஞ்சி மஸ்தான். இறுதி கட்டம் வரை அவரை எதிர்த்து ஒருவர் கூட அவைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், போட்டியின்றி விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. மாவட்ட அவைத் தலைவராக செஞ்சி மஸ்தான் தேர்வு செய்யப்பட்டாலும், மாவட்ட பொறுப்பாளராக தன்னுடைய ஆதரவாளரே இருப்பதால், வடக்கு மாவட்டத்தில் தொடர்ந்து செஞ்சி மஸ்தான் ஆதிக்கமே இருக்கும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அமைச்சர் பொன்முடி எவ்வளவு முயன்றாலும் தன்னுடைய வியூகத்தாலும், சமயோகித யோசனையாலும் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் செஞ்சி மஸ்தானின் ஆதிக்கத்தை குறைக்க முடியவில்லை என கூறப்படுகிறது. விழுப்புரத்தின் குறுநில மன்னர் என்று வர்ணிக்கப்படும் பொன்முடியையே எதிர்க்கும் அளவுக்கு மஸ்தானுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் சார்ந்த சமூக தலைவர்கள் செஞ்சி மஸ்தானுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதனால், பொன்முடிக்கு தொடர்ந்து மஸ்தானால் மாவட்டத்தில் நெருக்கடி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.