(Source: ECI/ABP News/ABP Majha)
Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனா" உச்சநீதிமன்றம் அதிரடி!
சவுக்கு சங்கர் மீதான 2வது குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிரபல யூடியுபரான சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை, கோயம்புத்தூர் காவல்நிலையங்களில் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவாகின. இறுதியில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அப்போதைய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.
இதனை எதிர்த்து சவுக்கு சங்கர் தாய் தொடர்ந்த வழக்கில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். அடுத்ததாக தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு அரசியல் வட்டாரத்திலும் எதிர்ப்பு குரல் எழுந்தது. திமுக கூட்டணியில் இருக்கக் கூடிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், சவுக்கு மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல் என்றும், இந்த முடிவை நீதிமன்றம் ரத்து செய்வது இன்னொரு முறை நடக்கும் என்றும் விமர்சித்திருந்தார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தை ரத்து செய்து, வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.
குண்டர் சட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீதான மற்ற வழக்குகளில் ஜாமின் கிடைத்தால் அவரை வெளியே விடலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.