கைகொடுத்த கணவர்...அமைச்சரான ஜடேஜா மனைவி யார் இந்த ரிவாபா? | Rivaba Jadeja Gujarat Cabinet Reshuffle
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் ஜடேஜா பவுண்டரி அடித்து அசத்தியதை பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போது ரிவாபா ஜடேஜா அரசியல் அரங்கில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். யார் இந்த ரிவாபா? அவர் எப்படி அரசியலுக்குள் வந்தார்? அவரது வெற்றிக்கு பின்னால் ஜடேஜாவின் பங்கு என்ன? என்பதை பார்க்கலாம்.
குஜராத்தில், பாஜக-வைச் சேர்ந்த முதலமைச்சர் பூபேந்திர படேலை தவித்து அமைச்சர்கள் அனைவரும் நேற்று ராஜினாமா செய்த நிலையில், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. அதில் ஒரு அமைச்சராக, பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா இடம்பெற்றுள்ளார்.
குஜராத் அரசியல் வட்டாரத்தில் ரிவாபா ஜடேஜா குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இப்போது அவர் குஜராத் மாநில அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குஜராத் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரிவாபா கிரிக்கெட் வீரர்ஜடேஜா மனைவி மட்டுமல்ல. அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. ராஜ்கோட்டில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.
திருமணத்திற்கு முன் அவர் சமூக சேவை மற்றும் பெண்கள் நலனுக்காக தீவிரமாகப் பணியாற்றி வந்துள்ளார். அரசியல் மீது அவருக்கு ஆர்வம் வந்தது 2018ஆம் ஆண்டில்தான். சரியாக 2019ல் அவர் பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். குறுகிய காலத்திலேயே, தனது பிரசாரம் மற்றும் மக்களிடம் கொண்ட தொடர்பால் அவர் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கினார். அவரது மாமனார் மற்றும் கணவர் ஜடேஜாவின் சகோதரி என குடும்பத்தில் சிலர் வேறொரு கட்சியில் இருந்தனர். ஆனால், அது எதையும் பொருட்படுத்தாமல் தனது அரசியல் பாதையை அவர் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்தார்.
இந்த வெற்றிப் பயணத்தில் ரவீந்திர ஜடேஜாவின் பங்கு மகத்தானது. ஒரு மனைவியின் அரசியல் கனவுக்காக, தனது கிரிக்கெட் பிசியான ஷெட்யூலுக்கு நடுவிலும் அவர் நேரம் ஒதுக்கினார். பிரசாரத்தின்போது ரிவாபாவுடன் சேர்ந்து ஜடேஜா வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். தனது சமூக வலைதள பக்கங்கள் அனைத்திலும், மனைவியின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். "எனது மனைவிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், நாட்டின் வளர்ச்சிக்கான வாக்கு" என்று அவர் வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டார். ஜடேஜாவின் இந்த ஆதரவு, அவரது ரசிகர் கூட்டத்தை ரிவாபா பக்கம் திருப்பியது ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு கிரிக்கெட் நட்சத்திரத்தின் மனைவி என்பதையும் தாண்டி, ஒரு நல்ல தலைவருக்கான அத்தனை அம்சங்களையும் ரிவாபா கொண்டுள்ளார் என்று மக்கள் நம்பியதே இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு அடித்தளம். இந்த நிலையில், நேற்று அறிவித்தபடி, 26 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலை குஜராத் அரசு இன்று காலை வெளியிட்டது. அதில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா இன்று பதவியேற்றுள்ளார்.
ஆக, ஒரு பக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவின் வெற்றிக்காகப் போராடும் ஜடேஜா, மறுபக்கம் அரசியல் அரங்கில் மக்கள் சேவைக்காகப் பதவியேற்றுள்ளார் ரிவாபா ஜடேஜா.





















