Rahul Gandhi on caste census | ”MISS INDIA-ல் அதிர்ச்சி! ஒரு தலித் கூட இல்ல” ராகுல் வேதனை
தலித், பழங்குடியின, ஓபிசி பிரிவினரை சேர்ந்த பெண்களில் ஒருவர் கூட மிஸ் இந்தியா ஆகவில்லை என ஆதங்கமாக பேசியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கியமாக இடம்பெற்றது சாதிவாரி கணக்கெடுப்பு. தேர்தலுக்கு பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் ராகுல். நாடாளுமன்றத்திலும் இதுபற்றி ராகுல் பேசியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் அனுராக் தாக்கூர், ராகுலை சாதியை வைத்து விமர்சித்ததாக வாக்குவாதம் முற்றியது.
இந்தநிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல்காந்தி சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார். அப்போது பேசிய அவர், மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்களின் பட்டியலில், தலித் அல்லது பழங்குடியின பெண் யாராவது இருப்பார்களா என்று பார்த்தேன். ஆனால், தலித், பழங்குடியினர், ஓ.பி.சி., பிரிவினரை சேர்ந்த பெண்கள் ஒருவர் கூட இல்லை என கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘90 சதவீத மக்கள் அரசியலமைப்பில் பங்கேற்க முடியவில்லை என்றால் அரசியலமைப்பை நாம் பாதுகாக்க முடியாது. 90 சதவீத மக்கள் ஊடகங்களில் கூட முன்னணியில் இல்லை. பாலிவுட், கார்ப்பரேட் நிறுவனங்கள், மிஸ் இந்தியா உள்ளிட்டவற்றில் இந்த 90 சதவீதத்தில் இருந்து எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை தெரிய விரும்புகிறோம். மோடி அனைவரையும் முன்னேற்றிவிட்டார், நாம் வல்லரசு நாடாகி விட்டோம் என்று சொல்கிறார்கள். 90 சதவீத மக்களின் பங்களிப்பு இல்லாமல் நாம் எப்படி வல்லரசு ஆனோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் நாட்டில் கொள்கைகளை உருவாக்க முடியாது. நாட்டின் 90 சதவீத மக்கள் நலனுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும் அரசியலமைப்பை பாதுகாப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்று பேசியுள்ளார்.