PMK vs DMK : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடி
விக்கிரவாண்டியில் திமுக நிர்வாகி வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டி சேலைகளை பாமகவினர் வீடு புகுந்து சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி எம் எம் ஏ வாக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி பதவிக்காலத்தில் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் ஜூலை 10 வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக, பாமக, மற்றும் நாதக கட்சிகள் போட்டியிடும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.
திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவுக்காக வாக்கு சேகரிக்க திமுக அமைச்சர்கள் விக்கிரவாண்டியில் முகாமிட்டுள்ளனர். அதேபோல் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்காக அன்புமணி ராமதாஸின் குடும்பத்தினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீமானும் தனது வேட்பாளர் அபிநயாவுக்காக விக்கிரவாண்டியிலேயே முகாமிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் ராமலிங்கம் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டி, சேலை, சட்டைகள் பதிக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த பாமகவினர் நேரடியாக கும்பலாக சென்று வீடுபுகுந்து அட்டைப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த வேட்டி சேலைகளை பறிமுதல் செய்து சாலையில் வீசியெறிந்தனர்.
மேலும் காவல்துறைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தகவல் பாமக வினர் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி பாமகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்