Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
அதிக கட்டணம் என்றாலும் குறைவான மணி நேர பயணம் என்பதால் பலரும் அதில் செல்கிறார்கள். ஆனால் அதிவேகம் என கூறிவிட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களை விட குறைவான வேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இந்தியாவின் அதிவேக ரயிலாக அறியப்படும் வந்தே பாரத் ரயில் தனக்கு அதிருப்தி அளித்ததாக அதனை உருவாக்கியவர்களில் ஒருவரான சுதான்ஷூ மணி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் ரயில்
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்றபோது பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் மிக முக்கியமாக ரயில்வே துறையில் வந்தே பாரத் எனப்படும் அதிவேக ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை எழும்பூர் - நாகர்கோயில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, மதுரை - பெங்களூரு, சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
அதிக கட்டணம் என்றாலும் குறைவான மணி நேர பயணம் என்பதால் பலரும் அதில் செல்கிறார்கள். ஆனால் அதிவேகம் என கூறிவிட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களை விட குறைவான வேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. பல ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதால் தான் விரைவாக செல்கிறது, அதிவேகம் எல்லாம் இல்லை என பலரும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலை உருவாக்கியவர்களில் ஒருவரான சுதான்ஷூ மணி அறிமுகமான 7 ஆண்டுகளில் முதல் முறையாக பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
மோசமான ஆக்கிரமிப்பு
லக்னோவின் சர்பாக் நிலையத்தில் பிரயாக்ராஜுக்கு அவர் பயணப்பட்டார். பின்னர் தனது பயண அனுபவத்தை அவர் பகிர்ந்தார். எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்த அவர் உள்ளே இருந்த சுத்தம் மற்றும் சுகாதாரமான உணவு ஆகியவற்றை பாராட்டினார். அதேசமயம் பெட்டியில் இருந்த சிவப்பு கம்பளம் விரிப்பு, தேவையற்ற ஆக்கிரமிப்பு குறித்து அதிருப்தியடைந்தார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வந்தே பாரத் ரயிலின் வெளிப்புறம் பெரும்பாலும் நாங்கள் கட்டியதைப் போலவே இருந்தது. பக்கவாட்டு சுவரில் கொஞ்சம் அலை அலையாக இருந்திருக்கலாம். ஆனால் மற்ற இந்திய ரயில்களை விட வந்தே பாரத் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
மேலும் கோச்சில் போடப்பட்டிருந்த சிவப்பு கம்பள விரிப்பு தேவையற்றதாக இருக்கும் நிலையில் அதில் ஏற்பட்டிருந்த கறை பயணிகளுக்கு வந்தே பாரத் ரயில் மீது உண்டாகும் நம்பிக்கையை மறைப்பது போல் உணர்ந்தேன். அதேசமயம் இருக்கைகள் முன்மாதிரியை விட மிகவும் வசதியாக இருந்தன.
கழிப்பறை சுத்தமாகவும் செயல்பாட்டுடனும் இருந்தது. ஆனால் செலவுக் குறைப்பு என்ற பெயரில் அதில் செய்யப்பட்டுள்ள வசதிகளில் பிறரின் கைரேகைகள் தெளிவாக பதிவாகியிருந்தது. இது எங்களது ரயில் கொள்முதல் முறையின் நித்திய சாபமாக பார்க்கிறேன். மொத்தத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணம் சென்ன நன்றாக இருந்தது. இருப்பினும் முன்னே இருந்த மாதிரி இல்லை என்பதை உணரக்கூடிய வகையில் மேம்படுத்தப்படவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.






















