Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி "நியாயப்படுத்த பார்க்குறிங்களா”
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய கஸ்தூரியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி காட்டியுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. அதனால் எந்த நேரத்திலும் கஸ்தூரி கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆரம்பத்தில் விளக்கம் கொடுத்து கொண்டிருந்த கஸ்தூரி, பின்னர் மன்னிப்பு கேட்டு தான் பேசிய கருத்தை திரும்பப் பெற்றார். இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் கஸ்தூரி மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கஸ்தூரி தலைமறைவான நிலையில், அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கைதில் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ள கஸ்தூரி, முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி மதுரை உயர்நீதிமத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”குறிப்பிட்ட சமூகப் பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என ஏன் கஸ்தூரி கூறினார்? அதற்கான அவசியம் என்ன?அவர் பேசியது தேவையற்றது. கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னைக் கூறும் அவர் எப்படி இத்தகைய கருத்தை தெரிவிக்கலாம்?”என காட்டமாக தெரிவித்தார் நீதிபதி.
மேலும் கஸ்தூரியின் மன்னிப்பு தவறை உணர்ந்து கேட்டதாக தெரியவில்லை. தான் கூறியதை நியாயப்படுத்தும் விதத்தில் கூறியதாகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில் அவரது முன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
அதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தலைமறைவாகியுள்ள கஸ்தூரியை கைது செய்யும் வேலைகளில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.