EX IAS-ன் அரசியல் எண்ட்ரி! ராகுல் தரமான சம்பவம்! மரண பீதியில் கம்யூனிஸ்ட், பாஜக
மத்திய அரசை கண்டித்து ஐஏஎஸ் பதவியை தூக்கியெறிந்த கண்ணன் கோபிநாத்தை காங்கிரஸுக்கு கொண்டு வந்து அசத்தியுள்ளார் ராகுல்காந்தி. வரும் சட்டசபை தேர்தலில் கண்ணன் கோபிநாதனை வைத்து ப்ளான் ஒன்றை போட்டுள்ளது காங்கிரஸ்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன். 39 வயதான தாத்ரா நாகர் ஹவேலி கலெக்டராக இருந்தவர். 2018ல் மழை வெள்ளம் கேரளாவையே புரட்டி போட்ட போது மக்களுக்கு உதவுவதற்காக களத்தில் இறங்கினார் கண்ணன் கோபிநாதன். அனைவரது கவனமும் அவர் மீது திரும்பிய பிறகு தான் அவர் ஐஏஎஸ் அதிகாரி என்பது வெளிச்சத்துக்கு வந்தது. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டே கேரள வெள்ளத்தின் போது தன்னார்வலராக செயல்பட்ட கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்தநிலையில் 2019ல் தாத்ரா நாகர் ஹவேலி கலெக்டர் பதவியில் இருந்து மின்சார வாரிய செயலர் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுச் செயலர் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். 2019 மக்களவை தேர்தலின் போது பாஜக ஆதரவு வேட்பாளர் விதிமுறைகளை மீறியதாக கண்ணன் கோபிநாத் நோட்டீஸ் அனுப்பியதால் தான் பதவி மாற்றப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. பாஜகவினருக்கு இவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
இந்த நேரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை 2019ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் கண்ணன் கோபிநாதன். இந்தநிலையில் பதவியை ராஜினாமா செய்த 5 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
அதன்பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அவர், ‘சேவை செய்வதற்காக ஐஏஎஸ் ஆனேன். பேச்சுரிமைக்காக அதை விட்டு விலகினேன். காங்கிரஸ் மூலம் மக்களுக்கு சேவை செய்யவும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் என்னால் முடியும்” என தெரிவித்துள்ளார். கேரளாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கேரளாவில் கட்சியை பலப்படுத்தும் வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான கண்ணன் கோபிநாதனை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளார் ராகுல்காந்தி. முன்னாள் அதிகாரிகள் கட்சியில் இணைவது இளைஞர்கள் மத்தியில் கட்சியை வளர்ப்பதற்கு உதவியாக இருப்பதால் அதனை கவனத்தில் வைத்து ராகுல்காந்தி இந்த முடிவை எடுப்பதாக சொல்கின்றனர்.
தமிழ்நாட்டில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை மக்களவை தேர்தலில் களமிறக்கினார் ராகுல்காந்தி. திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று எம்.பி ஆனார். அந்த வரிசையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதனும் அரசியலில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஏற்கனவே கேரளாவில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்திக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளது. இருந்தாலும் கேரளாவில் காங்கிரஸுக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு இல்லாததால் கண்ணன் கோபிநாதனை வைத்து காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். கேரளாவில் சுரேஷ் கோபி எம்.பி ஆனதன் மூலம் பாஜகவும் அடியெடுத்து வைத்துள்ளதால் அதற்கு செக் வைக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளதாக சொல்கின்றனர்.





















