EPS on Sengottaiyan | செங்கோட்டையன் நீக்கம்?’’துரோகிகளுக்கு இடமில்லை’’EPS-ன் அதிரடி மூவ்!
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஓபிஎஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக வந்தது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது செங்கோட்டையன்அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறாரா என்ற கேள்வியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன்,ஓ,பன்னீர்செல்வம்,டிடிவி் தினரகன் உள்ளோட்டோர் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து இருந்தார். அதேபோல், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி அதிரடி காட்டினார் ஈபிஎஸ். அதோடு செங்கோட்டையன் ஆதரவாளர்களையும் அடுத்தடுத்து நீக்கினார். இச்சூழலில் தான் டெல்லிக்கு சென்ற செங்கோட்டையன் பாஜக தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து பேசினார். அமித்ஷா மற்றும் நிர்மலாசீதாராமனைச் சந்தித்த பிறகு சைலண்ட் மோடுக்கு சென்றார்.
இந்நிலையில் தான் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செங்கோட்டையன் காரில் ஒன்றாக வந்தார். இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும் செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் ஒரே காரில் பயணித்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது. அடுத்ததாக டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய மூவரும் சேர்ந்து தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவிிி தினகரன் செங்கோட்டையன் எங்களோடு இணைந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணன் செங்கோட்டையன் மற்றும் அண்ணன் ஓபிஎஸ் ஆகியோர் இன்றைக்கு பசும்பொன் தேவரய்யா நினைவிடத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அம்மாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்பதால் செங்கோட்டையன் கொங்கு நாட்டில் இருந்து இங்கே வந்திருக்கிறார்”என பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ்யிடம் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர்“கட்சிக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தயக்கம் காட்டப்போவதில்லை”என சற்றும் யோசிக்காமல் பதிலளித்தார். மேலும் பேசிய அவர் செங்கோட்டையன் திமுகவின் பி டீம் எனவும், அவர் ஒரு துரோகி எனவும் அவரால் தான் 2021 தேர்தலில் அதிமுக தோல்வியுற்றதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஏற்கனவே செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து ஈபிஎஸ் நீக்கியிருந்த நிலையில், தற்போது செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தே நீக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஈபிஎஸ் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காணலாம்.





















