Delhi Next CM: டெல்லியின் அடுத்த முதல்வர்? முதலிடத்தில் பர்வேஷ் வர்மா! வெளியான லிஸ்ட்!
பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும் டெல்லியை பொறுத்தவரை கடந்த 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இச்சூழலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அங்கு வெற்றி பெற்றிருப்பதால் பாஜகவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ரேசில் ஐந்து முக்கிய தலைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடே எதிர்பார்த்த டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 இடங்களில் தான் வெற்றி பெற்றது. பாஜகவோ 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. கடந்த 1998 ஆம் ஆண்டிற்கு பின் 2013 ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியின் பிடியில் இருந்த டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் வருகைக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சியிடம் சென்றது. தொடர்ந்து அவர் 10 வருடங்களுக்கு மேல் டெல்லி முதல்வராக இருந்தார். இந்த நிலையில் தான் தற்போது பாஜக டெல்லியை கைப்பற்றி இருக்கிறது. இச்சூழலில் டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரேசில் ஐந்து முக்கிய தலைகள் இருக்கின்றனர்.
முன்னாள் எம்.பி. பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை புது டெல்லி தொகுதியில் தோற்க்கடித்த பிறகு பாஜகவின் முக்கிய முகமாக மாறியிருக்கிறார். முன்னாள் டெல்லி முதலமைச்சர் சாஹிப் சிங் வர்மாவின் மகனான இவர் இந்த வெற்றியின் மூலம் முதல்வர் ரேசில் முன்னணியில் இருக்கிறார்.
இவருக்கு அடுத்த இடத்தில் இருப்ப்வர் விஜேந்தர் குப்தா. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் டெல்லி பாஜக தலைவராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த காலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருந்த ரோகிணி தொகுதியில் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றவர். விஜேந்தர் குப்தா டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். டெல்லி அனுபவமிக்க பாஜக தலைவர் என்பதால் இவரும் முதலமைச்சர் ரேசியில் முதன்மையான இடத்தில் இருக்கிறார்.
இந்த ரேசில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் சதீஷ் உபாத்யாயா. டெல்லியின் முன்னாள் பாஜக தலைவரான இவர் டெல்லி யுவ மோர்ச்சாவின் தலைவராகவும், என்டிஎம்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நிர்வாக திறமை கொண்டவராக அங்குள்ள பாஜகவினரால் அறியப்படும் இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர் என்பதால் இவரை பாஜக தலைமை டெல்லியின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஆஷிஷ் சூட். பாஜகவின் பஞ்சாப் முகம். பாஜக கவுன்சிலராக பணியாற்றியுள்ள இவர் டெல்லி பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது கோவாவின் பொறுப்பாளராகவும், ஜம்மு-காஷ்மீரின் இணைப் பொறுப்பாளராகவும் உள்ளார். பாஜக தேசியத் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்ட இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இதனால் இவரும் இந்த ரேசில் இடம்பெற்றுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய ஜிதேந்திர மகாஜன் மூன்றாவது முறையாக டெல்லி ரோஹ்தாஸ் நகர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். இவருக்கும் டெல்லியின் அடுத்த முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் பாஜக தலைமை யாரும் எதிர்பார்க்காத நபரையும் திடீரென முதலமைச்சராக அறிவிக்கும் என்று தகவலும் வெளியாகியுள்ளது.





















