தலைகாட்டிய புஸ்ஸி ஆனந்த்! விஜய் கொடுத்த TASK! 20 நிமிட MEETING
கரூர் சம்பவத்திற்கு பிறகு தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களுக்கு பிறகு வெளியே தலைகாட்டியுள்ளார். உடனடியாக விஜய்யை சந்தித்ததாகவும், அவர் முக்கியமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளதாகவும் சொல்கின்றனர்.
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அதனால் சம்பவம் நடந்ததில் இருந்தே புஸ்ஸி ஆனந்த் வெளியே தலைகாட்டாமல் தலைமறைவாக இருந்தார். அவர் இல்லாமலேயே சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடந்தது. விஜய்யும் மாவட்ட செயலாளர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. தவெக தலைவர் விஜய்யும் நீதி வெல்லும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். வழக்கு சிபிஐ கைக்கு மாறிய பிறகு தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்தும், சிடிஆர் நிர்மல்குமாரும் வெளியே தலைகாட்டியுள்ளனர். இருவரும் உடனடியாக நேற்று இரவே விஜய்யை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
விஜய்யும் புஸ்ஸி ஆனந்தும் சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. நலம் விசாரிப்பு முடிந்தவுடன் கட்சியின் அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு கட்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதனால் கட்சிப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க விஜய் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
அதற்கு முன்பு மிக முக்கியமாக கரூருக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக சொல்கின்றனர். விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் இருப்பது விமர்சனத்தில் சிக்கியது. இந்தநிலையில் முதல் வேலையாக அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தேவையான உதவிகளை செய்ய விஜய் முடிவெடுத்துள்ளார். மீண்டும் கூட்டம் கூடி சிக்கலாகிவிடக் கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட மக்களையெல்லாம் ஒரே இடத்தில் வைத்து சந்திக்கும் முடிவை விஜய் எடுத்துள்ளதாக சொல்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் உடனடியாக செய்து முடிக்கும் பணி புஸ்ஸி ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புஸ்ஸி ஆனந்தும் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் .




















