Annamalai BJP : ஷாக் கொடுத்த அண்ணாமலை! கடுப்பில் பாஜக சீனியர்கள்! பரபரக்கும் கமலாலயம்
பாஜக சீனியர்களையே கண்டுகொள்ளாத அண்ணாமலை திமுக நடத்தும் விழாவுக்கு மட்டும் உடனே செல்லலாமா என பாஜகவின் முக்கிய புள்ளிகள் கடுப்பில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டதை வைத்து திமுக- பாஜக கூட்டணியா? என ஆரம்பித்து வைத்தார் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். ஆனால் இது திமுக நிகழ்ச்சி அல்ல, அரசு நிகழ்ச்சி என பதிலடி கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக, பாஜக 2 தரப்பில் இருந்துமே அதிமுகவின் விமர்சனத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விழாவில் கலந்து கொண்டது பாஜக வட்டாரத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்ட சீனியர்களை அண்ணாமலை கண்டுகொள்வதில்லை என்றும், அவர்களும் அண்ணாமலை மேல் கடுப்பில் தான் இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே பேச்சு இருக்கிறது. அண்ணாமலையின் நடவடிக்கை பற்றி பாஜக தலைமை வரைக்கும் தங்கள் அதிருப்தியை கொண்டு சேர்ந்ததாகவும் பேசப்பட்டது. தற்போது நாணய வெளியீட்டு விழாவை வைத்து திமுக எதிர்ப்பில் இருந்து அண்ணாமலை பின்வாங்கிவிட்டாரா என்று பாஜக சீனியர்கள் கேள்வியை முன்வைப்பதாக கூறப்படுகிறது. ஆளுநர் இல கணேசன் தனது இல்ல நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வைத்த போது அண்ணாமலை அங்கு செல்லவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு வந்ததால் நான் செல்லவில்லை என்றார். மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மோசமாக நடத்தப்படுவதால் இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.
அதனை சுட்டிக்காட்டியே அண்ணாமலையை நோக்கி கேள்வியை வைக்கின்றனர் பாஜக சீனியர்கள். பாஜகவை சேர்ந்த ஒருவரது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கே இப்படி காரணம் சொன்ன அண்ணாமலை திமுக அழைக்கும் போது மட்டும் மறுப்பு சொல்லாதது ஏன் என கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவினர் மீது திமுக தலைமையிலான அரசு மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையா? அதையெல்லாம் அண்ணாமலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா என்றும் முணுமுணுத்துள்ளனர். பாஜக சீனியர்களை அண்ணாமலை கண்டுகொள்வதில்லை என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக சீனியர்கள் கடுப்பில் இருப்பதாக சொல்கின்றனர். ஆனால் பாஜக தலைமையின் உத்தரவினால் தான் அண்ணாமலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கின்றனர்.