Amitshah on VK Pandian : ”ஒடிசாவை தமிழர் ஆளலாமா? மோடி பாணியில் அமித்ஷா! VK பாண்டியனுக்கு ஸ்கெட்ச்
பூரி ஜெகநாதர் கோயில் கஜானா சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக வி.கே.பாண்டியனை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கிய நிலையில், ஒடிசாவை தமிழர் ஆளலாமா என அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது மோதலை பற்றவைத்துள்ளது.
ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தலும் நடக்கும் நிலையில், பாஜக மற்றும் ஆளும் பிஜூ ஜனதா தளம் இடையே கடும் போட்டி இருக்கிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிறகு எதிராக பாஜகவினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுவும் ஒடிசாவின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஏ ஆகவும் இருக்கக் கூடிய வி.கே. பாண்டியனை டார்கெட் செய்து வருகின்றனர். ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய நபராக இருக்கக் கூடிய வி.கே.பாண்டியன் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.
ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, பூரி ஜெகந்நாதர் கோயிலின் கஜானா சாவிகள் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என வி.கே.பாண்டியனை மறைமுகமாக விமர்சித்தார். தமிழ்நாட்டிற்கு அதனை அனுப்பியது யார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?. தமிழக மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழகத்தை அவமதிப்பது அல்லவா?. தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்? என விமர்சித்திருந்தார்.
மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த வி.கே.பாண்டியன், ‘ஜகந்நாதர் கோயிலின் சாவிகள் எங்கே போனது என்பதை பிரதமர் கண்டுபிடிக்க வேண்டும். பணவீக்கம், வேலைவய்ப்பு பற்றி பேசாமல் கோயிலை வைத்து வெறும் அரசியல் பேச்சு மட்டும் தான் பேசுகிறார்” என கூறியிருந்தார்.
இந்தநிலையில் மோடி பாணியில் அமைச்சர் அமித்ஷா வி.கே.பாண்டியன் குறித்து பேசியுள்ளது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக பேசிய அவர், ‘இந்த தேர்தல் ஒடிசாவின் பெருமை, ஒடிசாவை ஒரு தமிழர் ஆட்சி செய்யலாமா? பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தால் ஒடியா மொழி பேசக்கூடிய ஒரு இளம் முதலமைச்சர் ஆட்சி செய்வார் என நான் உறுதியளிக்கிறேன்” என கூறியுள்ளார்.