40 சீட் கேட்ட அமித்ஷா? கறாரா இருக்கும் EPS! அதிமுகவின் கூட்டணி கணக்கு
2021 தேர்தல்ல நாங்க கேட்ட சீட்டை குடுக்கல, இந்த தடவை விட்டுக்குடுக்க முடியாது, எப்படியாவது 40 சீட் குடுத்துருங்க என பாஜக அதிமுகவை நெருக்குவதாக சொல்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் இபிஎஸ் வளைந்து கொடுக்காமல் விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது.
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து களத்தில் இறங்கின. இந்த கூட்டணியில் 177 தொகுதிகளை வசமாக்கிக் கொண்ட அதிமுக, 23 தொகுதிகளை பாமகவுக்கும், 20 தொகுதிகளை பாஜகவுக்கும் ஒதுக்கியது. அப்போதே 40 தொகுதிகளை வாங்கிவிட வேண்டும் என போராடிய பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி முறிந்த நிலையில், அந்த தேர்தலில் 11.24% வாக்குகளை பெற்று தமிழ்நாட்டில் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அடைந்தது பாஜக. அதனால் 2024 சட்டப்பேரவை தேர்தலில் 40 சீட்டாவது எங்களுக்கு வேண்டும் என அதிமுகவிடம் பாஜக விடாப்பிடியாக இருப்பதாக சொல்கின்றனர். அதுவும் பாரிவேந்தர், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் ஆகியோர் எங்களை நம்பி இருப்பதால் அவர்களையும் எங்களால் விட்டுவிட முடியாது, எந்த பிரச்னையும் இல்லாமல் அவர்களுக்கும் நாங்களே தொகுதிகளை ஒதுக்கவாவது 40 சீட் தர வேண்டும் என பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் இபிஎஸ் இறங்கி வர தயாராக இல்லை என கூறப்படுகிறது. கடந்த முறை ஒதுக்கிய அதே 20 சீட்டை தான் இந்த முறையும் பாஜகவுக்கு ஒதுக்க இபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். அதிமுகவின் முக்கிய புள்ளிகளும் நாம் சீட்டை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றே இபிஎஸ் காதுகளுக்கு கொண்டு செல்வதாக தெரிகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினரை, சீட் விவகாரத்தில் மேலும் கோபமாக்கி விட வேண்டும் என நினைத்து இபிஎஸ் கவனமாக காய் நகர்த்துவதாக சொல்கின்றனர்.
ஒருபக்கம் பாஜக சீட் விவகாரத்தில் நெருக்கி வந்தாலும், மற்றொரு பக்கம் இபிஎஸ் கூட்டணிக்குள் வேறு யாரை கொண்டு வரலாம் என தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம். கூட்டணிக்குள் அதிக கட்சிகள் வந்தால் நாம் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் பாஜக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.





















