DMK 2026 Election Plan | தனித்து நிற்கவும் தயார்..ஜெ. ஸ்டைலில் ஸ்டாலின்!காலர் தூக்கும் திமுக!
ஒரு பக்கம் தமிழ்நாட்டில் விரைவில் காமராஜர் ஆட்சி என்று காங்கிரசும், மாநில கட்சி அங்கீகாரம் பெற்றுவிட்ட தெம்பில் விடுதலை சிறுத்தைகளும் வளம் வரும் நிலையில், 2026 தேர்தலில் கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்ற ரிப்போர்ட் ஸ்டாலினுக்கு சென்றுள்ளது.. அதனால் ஜே பாணியில் திமுக தனித்து போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
நாடாளுமன்ற வெற்றியை தொடர்ந்து தன்னுடைய முழு கவனத்தையும் 2026 சட்டமன்ற தேர்தலில் நோக்கி திருப்பியுள்ளார் ஸ்டாலின். இன்னும் தேர்தலுக்கு 20 மாதங்கள் இருக்கும் நிலையில், திமுகவின் சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தற்போதே பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்று வந்தார் அமைச்சர்கள் கே என் நேரு, ஏவ வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகிய அதே டீம் சட்டமன்ற ஒருங்கிணைப்பு குழுவிலும் இடம் பெற்றுள்ளார்கள்.
ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது இந்த டீம். இந்நிலையில் தான் நேற்று 234 தொகுதியின் பார்வையாளர்களையும் அழைத்து தன்னுடைய குறிஞ்சி இல்லத்தில் விருந்து வைத்து சிறப்பாக கவனித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
40 தொகுதிகளிலும் வெற்றி என்ற முறையில் பாராட்டுவதற்கும், 2026 தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று பூஸ்ட் கொடுப்பதற்கும் இந்த மீட்டிங்கை பயன்படுத்தியுள்ளார் உதயநிதி.
இப்படி ஒருங்கிணைப்புக் குழு, ஆலோசனைக் கூட்டம், பார்வையாளர்களுக்கு அழைப்பு என எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பயணிக்க தொடங்கியுள்ளது திமுக. இதனை அதிமுக மட்டும் இன்றி திமுக கூட்டணி கட்சிகளும் உற்று நோக்கி வருகின்றன.
இதில் திமுக ஒரு ரிப்போர்ட்டை பலமாக நம்புகிறது, அதுதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் இருக்கும் 234 சட்டமன்ற தொகுதிகளையும் பிரித்துப் பார்த்தால், அதில் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி ரேசில் முன்னிலையில் இருக்கிறது. மேலும் பூத் வாரியாகவும் திமுக, அதிமுக வாங்கிய ஓட்டுக்கள் கணக்கிடப்பட்டு அடுத்த கட்ட நகர்வுகள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் தான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தொகுதி பார்வையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியின் தொகுதியாக இருந்தாலும் அங்கே முழு வேலைகளையும் எடுத்து பார்த்துக் கொள்வது திமுக உறுப்பினர்கள் தான். அப்படி இருக்கையில் அதிகப்படியான இடங்களில் திமுக போட்டியிட வேண்டும், அப்போதுதான் தொண்டர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள் என்று அவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஸ்டாலினுக்கும் அதேபோன்ற ஒரு ரிப்போர்ட் சென்றுள்ளது, மேலும் உதயநிதி ஸ்டாலினின் எண்ணமும் அதிகப்படியான தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்பதுதான்.
இந்த சூழலில் தான் அண்மைக்காலமாக சில திமுக கூட்டணி கட்சிகலின் body language மாறி உள்ளதை பார்க்க முடிகிறது. குறிப்பாக விரைவில் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி என்று மாநில காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை ஒவ்வொரு மீட்டிங்கிலும் பேசி வருகிறார். மேலும் 2026 தேர்தலுக்குப் பின், ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்று எம்பி கார்த்தி சிதம்பரம் சில நாட்களுக்கு முன் பேசியுள்ளார்.
இது அனைத்துமே கடந்த முறையை விட அதிக தொகுதிகளை திமுக விடமிருந்து பெறுவதற்கான காங்கிரஸின் டாக்டிக்ஸ் தான்.
அதே நேரம் அண்மையில் மாநில அங்கீகாரம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அதன் தலைவர் திருமாவளவனும் நிச்சயம் கடந்த முறையை விட அதிக தொகுதிகளை இம்முறை கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு கட்சிகளும் கேட்கும் பட்சத்தில், மற்ற கட்சிகளும் இதேபோன்று கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் திமுக தரப்பிலோ, வரையறுக்கப்பட்ட அளவிலான தொகுதிகளை மட்டுமே தர வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது.
ஒருவேளை கூட்டணியை உடைத்து விடுவோம் என்று, திமுக கூட்டணி கட்சிகளில் சிலர் கிளம்பினாள், அவர்களை கழட்டி விட்டு விட்டு தனித்து போட்டியிடவும் தயாராகி வருகிறது திமுக.
காரணம் 2016 இல், மக்கள் நல கூட்டணி அமைந்ததால், எப்படி தனித்து போட்டியிட்டு ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தாரோ, அதேபோன்று இம்முறையும் அதிமுக, பாஜக தனித்தனியே போட்டி, இன்னொரு பக்கம் சீமான், விஜய் ஆகியோர் களம் இறங்கினால், நிச்சயம் வாக்குகள் சிதறும். அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறது திமுக.
அதன் காரணமாகவே இன்னும் பல மாத காலம் கால அவகாசம் இருக்கும் நிலையிலும் தற்போது தேர்தல் பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளார் ஸ்டாலின் என்று சொல்லப்படுகிறது.