North Indians VS Police | உருட்டுக்கட்டை..இரும்பு ROD..போலீஸ் vs வடமாநில கும்பல்! உச்சக்கட்ட மோதல்
உத்தரப் பிரதேச சுற்றுலா பயணிகளுக்கு, தமிழக எல்லை சோதனை சாவடி காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் இரும்பு ராடு கொண்டு வட மாநில கும்பல் தாக்கியதில் போலீஸாரை தாங்கிய சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காரைக்காட்டில் தமிழ்நாடு மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீஸார் உத்தரப் பிரதேச சுற்றுலா பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக பணி மாறும் நேரம் என்பதால் சோதனைச் சாவடியில் போலீஸார் அனைவரும் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். இந்நிலையில் சுற்றுலா பேருந்து ஓட்டுநரிடம், போலீஸார் வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளனர். மேலும், பேருந்தின் ஒட்டுநரிடம் சோதனை சாவடியை கடந்து செல்ல பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் உத்தரப் பிரதேச சுற்றுலா பயணிகளுக்கு, சோதனை சாவடி காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், வடமாநில சுற்றுலா பயணிகள் இரும்பு ராடு கொண்டு போலீஸாரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் தலைமை காவலர்கள் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் போலீஸாருக்கு ஆதரவாக சென்று, சுற்றுலா பயணிகளை தடுத்து, அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கொளத்தூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட சுற்றுலா பேருந்து ஓட்டுநர் சிவ நாராயண் அஜய் உள்பட 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காவல்துறையினரை தாக்கியது மற்றும் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வட மாநில சுற்றுலா பயணிகள் புகார் அளித்துள்ளனர். அதில் சோதனைச் சாவடியில் நின்றிருந்த காவலர்கள் பேருந்தை வழிமறித்து பணம் கேட்டதாக புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை விசாரித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், வட மாநில சுற்றுலா பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மதுவிலக்கு காவலர்கள் செந்தில்குமார், முத்தரசன், சுகவனேஸ்வரன் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.