அம்மி மிதித்து அருந்ததி பார்த்து.. அசர வைத்த தைவான் தம்பதி! தமிழர் முறைப்படி திருமணம்
தைவான் நாட்டை சேர்ந்த காதலர்கள் சீர்காழியில் உள்ள சித்தர் பீடத்தில் வைத்து அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பட்டு வேட்டி சட்டை, சேலை என அசத்திய தைவான் தம்பதிக்கு ஊர் மக்கள் நேரடியாக வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே காரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இந்த சித்தர் பீடத்தில் பௌர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடக்கும். இதற்கு இந்தியாவில் மட்டும் இன்றி சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர்,தைவான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழக்கம். இந்த சித்தர் பீடத்திற்கு வரும் தைவான் நாட்டை சேர்ந்த டாகாங்,டிங்வன் இருவரும் இங்கேயே திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளனர்.
அதுவும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருவரும் ஆசைப்பட்டுள்ளனர். இதனையடுத்து சித்தர் பீடத்தில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாடி செந்தமிழ்ச்செல்வன், நாடி மாமல்லன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். உடனடியாக தமிழ்நாடு வந்த தைவான் தம்பதி தமிழ் முறைப்படி ஒளிலாயம் சித்தர் பீடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
பட்டு வேட்டி சட்டை, சேலை அணிந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தைவான் நட்டிலிருந்து வந்திருந்த உறவினர்களும் பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து தமிழர் மரபுபடி விழாவில் கலந்து கொண்டனர்.
தைவான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு திருமணம் நடப்பது பற்றிய செய்தி பரவியதும் ஊர் மக்களும், அக்கம் பக்கத்துக்கு ஊரில் இருந்து வந்தவர்களும் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.





















