Irfan View Video | ”என் அரசியல் பின்புலம்...என்ன காப்பாத்துறது உதயநிதி?”உடைத்து பேசிய இர்ஃபான்
யூடியூபர் இர்ஃபான் எனக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது எந்த ஒரு அரசியல் பின்புலமும் எனக்கு கிடையாது என்று பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தது, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரி கொண்டு ரிப்பன் மாதிரி வெட்டியது என சர்ச்சைகளில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான் மீது இன்னும் தமிழ்நாடு சுகாதாரத்துறையோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, ஒரு சாமானியன் இதுபோன்று ஒரு சம்பவத்தை செய்திருந்தால் இந்நேரம் அவனை உரித்து உப்புக்கண்டம் போட்டிருப்பார்கள். ஏன் இர்ஃபானுக்கு மட்டும் இந்த சலுகை ? அவர் அரசு அதிகாரியா ? அமைச்சரா ? இல்லை அதற்கும் மேலா ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டதற்கு, இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்றார், பின்னர், அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காதது குறித்து கேட்டப்போது அவர் என்ன கொலையா செய்துவிட்டார் ? இது ஒன்றும் பெரிய குற்றமல்ல என மாற்றிப் பேசினார்.
இர்ஃபானுக்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால், அவர்களின் அதிகாரத்தை தாண்டி சுகாதாரத்துறையாலோ, காவல்துறையாலோ நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும், கொஞ்ச நாளில் இதை மக்கள் மறுந்துவிடுவார்கள் என்பதால், இதை பெரிதுப்படுத்தி பேச வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தரப்புக்கு இர்ஃபானுக்கு ஆதரவளிக்கும் நண்பர் தரப்பில் இருந்து அறிவுறுத்தல் வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்காரணமாகவே, இர்ஃபான் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இதற்கு விளக்கம் அளித்து இர்ஃபான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “உதயநிதி ஸ்டாலினுடன் நான் வெளியிட்ட வீடியோ புரோமோசனுக்கானது மட்டுமே, அதற்காக என்னை எப்படி அவர்கள் ஆதரிப்பார்கள்” என இர்ஃபான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவங்களை பொருத்தவரையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் செயல்படுகிறது எனவும் இர்ஃபான் கூறியுள்ளார்.