Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் நாளை திறக்கப்பட உள்ளது. நாளை முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாகச் சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாளை சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக சர்வ தரிசன டோக்கன்கள் இன்று அதிகாலை முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக விஷ்ணு நிவாசம் உட்பட எட்டு இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. இலவச டோக்கன் பெற நேற்று மதியம் முதலே சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர்.திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பைராகி பட்டிடையில் அமைக்கப்பட்ட கவுன்டரில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்களும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றனர். நெரிசலில் சிக்கியவர்கள் கதறித் துடித்ததால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதில்,தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.