Rahul Gandhi meet PM Modi | இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்! மோடி - ராகுல் சந்திப்பு! பின்னணி என்ன?
பிரதமர் மோடியை மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சந்திப்பின் பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இச்சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சிபிஐ இயக்குனரை தேர்வு செய்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிபிஐ இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் பிரதமர், இந்திய தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உள்ளனர். தற்போது சிபிஐ இயக்குனராக இருக்கும் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் வரும் மே 25 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் அடுத்த சிபிஐ தலைவரை நியமிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனையில் ஈடுப்ட்டதாகவும் சொல்கின்றனர். குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற சூழல் உள்ள நிலையில் இது தொடர்பாகவும் மோடி - ராகுல் பேசியாதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் மோடி மற்றும் ராகுல்காந்தியின் சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.





















