Jana Nayagan Vs Censor Board: ‘ஜன நாயகன்‘ இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது போலயே.! டெல்லியில் ஆப்பு வைத்த சென்சார் போர்டு
விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், அங்கும் கேவியட் மனு தாக்கல் செய்து சிக்கலை ஏற்படுத்தியுள்ளது சென்சார் போர்டு.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு சிக்கல் தொடர்கிறது. ஏற்கனவே, படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்கு சென்ற நிலையில், தற்போது அதற்கு கட்டையை போடும் விதமாக, சென்சைர் போர்டு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. இதனால், ஜன நாயகன் திரைப்படம் இப்போதைக்கு வெளியாகாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
'ஜன நாயகன்'-க்கு தொடரும் சிக்கல்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, கடந்த 5-ந் தேதி அந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதையடுத்து, அதை எதிர்த்து அந்த படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, கடந்த 9-ம் தேதி தீர்ப்பளித்தார். அதில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்வதாகவும், படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தணிக்கை வாரியம் மேல் முறையீடு
இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, தணிக்கை வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்தது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஜன நாயகன் படத்தின் வெளியீடு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல் முறையீடு
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை, வரும் 21-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ள நிலையில், படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேவியட் மனு தாக்கல் செய்த சென்சார் போர்டு
இந்த சூழலில், படத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக, தணிக்கை வாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் ‘ஜன நாயகன்’ திரைப்பட வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதனால், ஜன நாயகன் படத்திற்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. எப்பாடியாவது பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட்டு, வசூலை அள்ளிவிடலாம் என்று எண்ணி, அதற்கான வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தணிக்கை வாரிகத்தின் கேவியட் மனுவால், இப்போது நிலைமை மாறிவிட்டது. விடாப்பிடியாக இருக்கும் சென்சார் போர்டால், இப்போதைக்கு படம் வெளியாகாது போலயே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





















