Venezuela President Trump?: என்னது.. வெனிசுலாவின் தற்காலிக அதிபரா.?! தனது சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு வைரல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர் என்று கூறும் வகையில், தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஒரு ப்ரொஃபைல் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்த அமெரிக்கா, அவர்களை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில், தானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர் என்று கூறும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வெனிசுலாவை கைப்பற்றிய ட்ரம்ப்
கடந்த ஜனவரி 3-ம் தேதி, ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அமெரிக்காவிற்கு நாடு கடத்தி, அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் வழக்கு பதியப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் அமெரிக்கா
இந்நிலையில், வெனிசுலாவின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றார். ஆனாலும், வெனிசுலாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கு தற்போது தேங்கியிருக்கும் 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை உடனடியாக அமெரிக்காவிற்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தற்போது டிரம்ப் நிர்வாகம் வெனிசுலா எண்ணெய் விற்பனையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தவும், அதன் வருவாயை அமெரிக்க கணக்குகளில் வைத்திருக்கவும் திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கை காலவரையின்றி தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
“வெனிசுலாவின் தற்காலிக அதிபர்“ - ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சை பதிவு
இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு வைரலாகியுள்ளது. அந்த பதிவில், ‘Acting President of Venezuela', அதாவது வெனிசுலாவின் தற்காலிக அதிபர் என்று தனது ப்ரொஃபைலில் சேர்க்கப்பட்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
அவர் இவ்வாறு தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது, வெனிசுலாவில் நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அது மட்டுமின்றி, அடுத்ததாக க்ரீன்லாந்து, கொலம்பியா போன்ற நாடுகளை அவர் குறி வைத்துள்ளதால், உலக நாடுகளும் அவரது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இத்தகைய சூழலில், அவரது இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.






















